பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி-விபத்து

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி-
விபத்து
------------

விபத்து..! சர்வ சாதாரணமாக நாம் கேள்விப்படும் ஒரு சொல். ஒரு விபத்து மூலம் ஒருவரின் தீண்டாமைக் குணம் எவ்வாறு மாறுகிறது என்பதை படம்பிடித்து காட்டும் கதை.

கதையை அலசுவதற்கு முன்....
நம்மில் பலருக்கு எழும் ஒரு கேள்வி.. குறிப்பாக மாநகரங்களில் வாழ்பவர்களின் மனதில் எழும் கேள்வி. தீண்டாமை இன்னுமா இருக்கிறது. கதைக்காக கதைவிடுகிறாரா கதாசிரியர் ?

அதற்கான விடை இதோ..

**கடந்த 2007 ல் அமெரிக்க செனட் சபையில் மார்டின் லூதர் கிங்கின் 50-வது ஆண்டு நினைவாக கொண்டுவரப்பட்டதுதான் 110-பில். அதில் இந்தியாவின் வளர்ச்சியையும், சமூக முன்னேற்றத்தையும் பாதித்துக் கொண்டிருப்பதும், இன்றளவும் தீர்வு காண முடியாததாகவும் இருப்பதுதான் தீண்டாமை என்ற சாதியப்பாகுபாடு. (United States should address the ongoing problem of Untouchability in India) என்ற ஆய்வு அறிக்கையை தீர்மானமாக கொண்டுவந்தது. இத்தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்கா இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டு தானே பல நூறு ஆண்டுகள் அடிமை மற்றும் தீண்டாமைத்தனத்தில் இருந்த கருப்பின மக்களின் விடுதலை பெற வழிகோலியது. ஆனால் இந்தியாவிலிருக்கும் நாம்........? வெட்கித் தலைக்குணிய வேண்டாமா ?

**பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் “மதம் உன்னை மிருகமாக்கும், சாதி உன்னை சாக்கடையாக்கும் “ எனும் வார்த்தைகளை உண்மையில் நாம் பின்பற்றியிருந்தால் இப்பொழுது நிகழும் சாதியக்கொடுமைகள், அண்மையில் தருமபுரி அருகே கீழ்சாதி என்று சொல்லப்படும் ஒர் இளைஞனை மேல்குடி ஜாதிக்கார பெண்ணை காதலித்தான் என்பதற்காக கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதெல்லாம் நிகழ்ந்து இருக்குமா ? மெத்த படித்துவிட்டோமென்று திமிரில் ஆடிக்கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு சாதிய வேறுப்பாட்டிலிருந்து விடுப்பட முடியவில்லை என்பதுதானே தவிர்க்க முடியாத உண்மை.

இத்தகைய தீண்டாமை வெறிச்செயல்கள் ஒழிந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஓர் எழுத்தாளின் கடமையாகவே விபத்து எனும் இக்கதையை எழுதியிருக்கிறார் கதாசிரியர் அபி. .
தீண்டாமை எனும் அரக்கனை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்ற விழிப்புணர்வை இக்கதையில் ஒரு பேருந்து பயண விபத்தின் மூலம் தனக்கே உரிய எதார்த்த எழுத்து நடையில் வீரியமாக சொல்கிறார் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்கள்.

ஒரு கதைக்குள் என்னென்ன சமூக அவலங்களை சொல்லமுடியுமோ அதை கதைக்களம் சார்ந்த அளவில் நன்றாக வெளிப்படுத்தி எழுதி காட்சிப்படுத்துவது பொள்ளாச்சி அபி அவர்களுக்கு கைவந்த கலை. ஆதிக்க மனப்பான்மையுடைய மேட்டுத்தோப்பு பன்னாடி ஒரு விபத்திற்கு பிறகு அவரிடம் ஏற்பட்ட மாற்றங்களை சேரியுள்ள சிலர் வெவ்வேறான செய்திகளாக புனைந்து பேசிக்கொள்கிறார்கள். இதைக்கேட்டப்படியே வரும் மாரிமுத்து எனும் கதைநாயகன் விபத்து ஏற்பட்ட அன்று ஏற்பட்ட நிகழ்வுகளை மனதிற்குள் அசைப்போடுகிறான். கதை விபத்து நடந்த நாளை நோக்கி பின்னோக்கி நகர்கிறது.

காலில் செருப்புக்கூட அணிய வசதியில்லாத அல்லது அனுமதியில்லாத மாரிமுத்து, பொள்ளாச்சிக்கு செல்ல தன் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக வெயிலை பொறுத்துகொண்டு காத்திருக்கும் காட்சியை விவரிக்கும் வரிகளில் , ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்ட ஒருவரின் மனநிலையை அப்பட்டமாக விவரிக்கப்பட்டுகிறது. இக்காட்சிகளில் மாரிமுத்து எனும் கீழ்சாதிகாரன் தோற்றம், அடிமைத்தனமாய் உழைக்கும் போக்கு, பேருந்து நிறுத்தம் இல்லாதை குறிப்பிடும் போது போகிறபோக்கில் விளம்பர நிறுவனங்களின் வியாபார நோக்கு என ஒருப்பிடி பிடிக்கிறார் எழுத்தாளர். பின்பு தனியார் பேருந்துகளின் வசூல் நோக்கில் செயல்படுவது குறித்தும், தனியார் பேருந்து ஓட்டுநர் மாரிமுத்து கீழ்சாதிக்காரன் தானே என்கிற ஏளனச்சிரிப்போடு பேருந்துவை நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வது என சிலசில காட்சிகளை படம்பிடித்தவாறே மாரிமுத்து பயணிக்கபோகிற அரசு பேருந்தின் அவலட்சணத்தையும் முன்னோட்டமாக சொல்லி நகர்கிறது கதை.

பிறகு.. கதையின் முக்கியக்கட்டம்.. அரசு பேருந்துக்குள் நிகழம் சம்பவங்கள்.

இதில் பேருந்துவின் நிலையை ”கண்டக்டர் முன்கேட்டருகே நின்று கொண்டு டபுள் விசிலடித்ததும், திடீரென்று ஒரு தொழிற்சாலையின் கனரக எந்திரங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இயங்குவது போன்று சப்தம் எழும்பியது.டிரைவர் அந்தப்பேருந்தின் கியரைப் போடுகிறாரா..?,அதன்மீது தொங்குகிறாரா..? என்றே தெரியவில்லை. “ என்கிற வரிகளில் அரசு பேருந்து இயங்கும் லட்சணத்தை, குறிப்பாக கிராமப்புறங்களில் ஒடும் அரசுப்பேருந்தின் நிலையை கோபம் கலந்த நையாண்டித்தனமான வர்ணனையில் வெளிப்படுத்தியது அபி அவர்களின் சிறப்பு.

மாரிமுத்து பேருந்துவில் இருக்கைத் தேடி ஒரு ஆளுக்கு அருகே அமருகிறார். உறங்கிக்கொண்டிருந்த அந்த ஆள் சடுதியில் விழித்து தன்னருகே கீழ்சாதி மாரிமுத்து இருப்பதை கண்டு திருடனைப்போல நோக்குவதும்.. பிறகு மேட்டுத்தோப்பு பன்னாடிதான் அது எனதெரிந்து மாரிமுத்து பயந்து எழுவதும்.. பன்னாடி ஆவேசமடைந்து பேசும் வரிகளும் காலங்காலமாக ஒருசில ஜாதிகளை அடிமைத்தனமாகவே பாவிக்கும் ஆதிக்க மனப்பான்மையில் ஊறிய ஜாதிகாரர்களின் சீர்கெட்ட மனநிலையினை ஒரு சாட்சியாகவே பதிவுசெய்கிறது.
மேட்டுக்குடி பன்னாடியான அந்த ஆளின் ஏச்சுப்பேச்சில் கூனி குறுகி பேருந்தில் மற்றவ்ர்களுக்கு முன் அவமானப்படும் மாரிமுத்துவின் நிலையை படம்பிடித்து தன் எழுத்தில் அபி அவர்கள் காட்சிப்படுத்தும்போது மனிதயினத்தின் மொத்த மேன்மையும் தலைக்கவிழ்கிறது.

இவ்வாறு காட்சிகள் நகரும்போதே.. தீடிரென்று அந்த அரசுப்பேருந்து, ஒட்டுநரின் கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகிறது அதில் பலமாக அடிப்பட்ட மேட்டுத்தோப்பு பன்னாடியை, விபத்திலிருந்த தப்பித்த மாரிமுத்து காப்பாற்றும் காட்சிகள் மனிதாபிமானத்தை பறைச்சாற்றுகிறது. கதாசிரியர் ஏன் அரசுப்பேருந்தின் நிலையை இவ்வளவு அழுத்தமாக சொல்கிறார் என்பது இவ்விபத்து காட்சிகள் விடையளிக்கின்றன.

காட்சி மருத்துமனைக்கு நகருகிறது.
அங்கு தலையில் பலத்த காயம் அடைந்த மேட்டுத்தோப்பு பன்னாடிக்கு மாரிமுத்து இரத்தம் வழங்க வேண்டிய நிர்பந்தம். இதுதான் கதையின் உச்சக்கடம் மருத்துமனை செவிலியரும் மாரிமுத்துவும் பேசும் வசனங்கள் தகுந்த சாட்டையடியை தீண்டாமை குணத்திலுள்ளவர்களுக்கு கொடுக்கிறது.


கீழ்குடி மாரிமுத்துவிற்கும் மேட்டுத்தோப்பு பன்னாடிக்கும் ஒரே இரத்தமான ” ஒ பாசிட்டிவ் ” என சொல்லும் நர்ஸிடம் மாரிமுத்து சொல்லும் வசனம் கைத்தட்டகூடிய இடம். அந்த வரி

“சந்தேகமில்லீங்க..ஒரே ரத்தம்னு சொன்னீங்கல்ல,அத நெனச்சுக்கிட்டேன்.”

இதற்கு நர்ஸ் சொல்லும் பதில் ..கைத்தட்டி விசில் அடிக்க கூடிய இடம். அந்த வரி.

“ஏம்ப்பா நீயும் மனுசன்தானே..!”

இப்போது மீண்டும் கதையின் ஆரம்பகாட்சியில் இருவர் பேசும் வசனத்தை கவனிப்போம்...

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒரு வாரமா மேட்டுத்தோப்பு பன்னாடி,ஊருக்குள்ளே வந்தாலும் முக்காடு போட்டுகிட்டுதான் போறாராமா..?

“இல்லையே,நம்ம ஊரைத் தாண்டி,நான் பாக்கும்போது,முக்காடு எதுவம் போடலியே..!”

விபத்துக்கு பிறகு மேட்டுத்தோப்பு பன்னாடி மனம் திருந்திவிடுகிறார் எனும் கதையின் முடிவை ஆரம்பக்காட்சிகளிலே சொல்லியது கதை நகர்த்தலின் ஆளுமையில் தனக்கு இருக்கும் வல்லமையை நிருபித்து இருக்கிறார் பொள்ளாச்சி அபி அவர்கள்.

இக்கதையின் நீளம் அதிகமென்று எந்தவித குறையும் இதில் காணத்தேவையில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் மனநிலையை விவரிக்க விரிவாகதான் எடுத்துரைக்க முடியும்.. எடுத்துரைக்க வேண்டும்.

நமது சமூக அமைப்பில் ஒட்டுமொத்தமாக நிலவும் இழிவு, பின்னடைவு, மனிதர்களுக்குகிடையேனான ஏற்றத்தாழ்வு, சாதியவெறி, நிறவெறி , சமூக இயலாமை போன்றவற்றை வேரோடு வேரின் மண்ணோடு பிடுங்கி எறிவது நம் ஒவ்வொரின் கடமை என்பதையும் யாவருக்கும் ஒரே இரத்தம் ஒரே நிறம் தான் என்பதையும் தனது வலுவான கதைக்கருவின் மூலம் கதை படிக்கும் வாசகர்களுக்கு விழிப்புணர்வு செய்ய முயன்ற தோழர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு சிவப்பு வணக்கங்கள்...!


--இக்கட்டுரை எனது சொந்த படைப்பே.


-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (31-May-15, 12:08 am)
பார்வை : 201

மேலே