பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி - அவள் அப்படித்தான்
சித்திரமும் கைப் பழக்கம். செந்தமிழும் நா பழக்கம் என்பார்கள். நுணுக்கமாக கதை எழுதுவதை எவ்வாறு கூறலாம்?? அபி அவர்களின் "அவள் அப்படித்தான்" என்கிற சிறு கதையை படித்தபோது என்னுள் எழுந்த கேள்வி இது?? கதை வடித்தல் மதி நுணுக்கம் என்று கூறலாமா?? இந்த கதையைப் பொருத்தமட்டில் கூறலாம் தான்.
"ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...?” கதையின் இந்த முதல் வரியை படிக்கும்போதே, ஏன் இப்படி சொல்கிறார்கள்??. என்னவாக இருக்கும் என்கிற உந்துதல் படிப்பவர்களுக்கு உருவாகிவிடும். ஆரம்ப வரியே ஈர்த்துவிடுகிறது. அடுத்தது என்ன சொல்ல வருகிறார் என்கிற ஆவலை படிப்பவர் மனதில் பெருக்கி கதைக்குள் நம்மை கொக்கி போட்டு இழுத்துக் கொண்டுவிடுகிறார் கதாசிரியர்.
கை கால்கள் நன்றாக இருப்பவர்களும், இளம் வயதினராக இருப்பவர்களும் அடுத்தவனை ஏய்ச்சிப் பிழைத்துக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், வயதான ஒரு பெண்மணி எவர் துணையும் அண்டாது, சுய தொழில் புரிந்து, சுயமரியாதையுடன் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. சோம்பித் திரிந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சவுக்கடி. அடுத்தவன் உழைப்பில் அண்டிப் பிழைக்கும் சோம்பேறிகளுக்கு இக்கதை சுருக்கென்று தைக்கக் கூடிய முள் என்று கூறினால் கூட அது மிகை ஆகாது.
இறைச்சிக்காக ஆடுகளை பலிபோடும் இடங்களை "ஆட்டுத் தொட்டி" என்பார்கள். அங்கு சென்று பார்ப்பவர்களுக்கு தெரியும் ஆட்டினை பலி போடுவது எப்படி என்று. பார்ப்பவர்கள் மாமிசம் தின்பதையே வெறுத்துப் போவார்கள். இந்த கதையிலும் "ஆட்டுத் தொட்டி" காட்சிகள் அத்தனையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி படிப்பவர்க்கு ஆட்டின் மீதான ஒரு பரிதாபத்தையும் வரவழைத்திருக்கிறார் அபி அவர்கள். ஒரு கதையினை படிக்கும்போது அதில் ஒன்றி அதில் நடக்கும் நிகழ்வுகளுக்காக நாம் கோபப் படுவதும், கண்ணீர் சிந்துவதும், மனம் பதை பதைத்தும் போகிறதென்றால் அது கதையை எழுதியவரின் நுட்பம் எனலாம். நம்மை இந்த கதைக்குள் ஒருவராக கொண்டு நிறுத்தி ஒவ்வொரு செயலும் நம் கண் முன்பாக நிகழ்வதைப் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்கி விடுகிறது
//"ரத்தம் கொப்பளித்து தெறித்த நான்கு விநாடிகளுக்குள்,தலையை தனியே அறுத்து..........."//
மேற்கூறிய பத்தியை படிக்கும்போது "ஐயோ ஆட்டினை இப்படி வெட்டுறாங்களே" என்று ஒரு சில மனங்களாவது இப்படி சொல்லாமல் இருக்க முடியாது. காட்சிகள் விவரிக்கப்பட்ட விதம் அப்படி. நேரில் காண்பது போல் சித்தரிக்கப்பட்டிருப்பது ஆசிரியரின் திறனை வெளிப்படுத்துகிறது.
//“அடப் போடா..எங்கப்பனும்,என்வீட்டுக்காரரும் சாகுறவரை செஞ்ச தொழிலுதான். இத வெச்சுத்தான் எம் பையனைப் படிக்க வெச்சோம்.கவருமென்ட்டு வேலை வாங்கிக் கொடுத்தோம். அவனுக்கு கல்யாணமும் செஞ்சு வெச்சோம்//. உண்மையாக... நேர்மையாக உழைத்து சம்பாதித்ததில் எத்தனை காரியங்களை சாதித்திருக்கிறாள் என்பதை அந்த காமாட்சி அம்மாள் கூறுகையில் அவளை எந்த உயரத்தில் ஏற்றி வைக்கிறார் கதாசிரியர் அவர்கள். அரசாங்க உத்தியோகம் கிடைக்கவில்லை என்று எந்த வேலையும் பார்க்காமல் வெட்டியாக திரிபவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை சொல்லிக் கொடுத்திருக்கிறது இந்த கதை. சுய தொழில் செய்த சம்பாத்தியத்தில் தான் எத்தனை சாதனைகள். பிள்ளையை படிக்கவைத்து, அரசு வேலை வாங்கி கொடுத்து, திருமணம் செய்து வைத்து என்று பட்டியல் நீளுகிறது...
"கவருமென்ட்டு வேலை வாங்கிக் கொடுத்தோம்" இதனைப் படிக்கும்போது கதாசிரியரின் குசும்பு புரிகிறது. வேலையைத் தேடிப் பெறலாம். அது சாதாரணம். "வாங்கிக் கொடுத்தோம்" என்று கூறுகையில் அது அசாதாரணமாக அல்லவா இருக்கிறது. வேலையை கூட விலை கொடுத்துதான் வாங்க வேண்டி இருக்கிறது இந்த பாழாய் போன நாட்டில் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பதை பாராட்டாமல் இருக்க இயலாது.
பொருளை தராசினில் அளக்கும்போது அது சரியாகத்தான் அளக்கப் படுகிறதா என்று நாம் எத்தனை பேர் சரிபார்க்கிறோம். இந்த காமாட்சி அம்மாவைப் பாருங்கள் எவ்வளவு உஷார். மற்றும் அதட்டிக் கேட்கும் பாங்கினை.
//தராசை சரியாப் புடிக்கலை.. குடுக்குற காசுக்கு மரியாதையா பொருள் குடுக்குறதுன்னா குடு.. இல்லேன்னா உன் யாவாரமே வேண்டாம்..”என்று குதித்தாள். //
ஒரு பொருளை நிறுத்தி வாங்கும் போது அளவு சரி இல்லையென்றால் இப்படித்தானே சண்டைக்கு நிற்க வேண்டும். இல்லை என்றால் நம் கண் முன்னே நடக்கும் சிறு சிறு கொள்ளைகளுக்கும் நாம் தானே காரணம் என்பதும் இவ்வரிகளில் தெளிவாகிறது தானே..!! இதுவும் ஒரு விழிப்புணர்வுதானே.
துணிக் கடையில் கடைக்காரன் நூறு ரூபாய் அதிகமாக கொடுத்ததை திருப்பிக் கொடுக்கும்போது எல்லோர் மனதிலும் உயர்ந்தல்லவா நிற்கிறார் அந்த காமாட்சி அம்மாள். இது போன்று நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று இக்கதையின் மூலமாக ஒரு நேர்மையான குணத்தை கடைபிடியுங்கள் என்று சொல்லாமல் அல்லவா சொல்லி இருக்கிறார் அபி அவர்கள்.
காமாட்சி அம்மாவின் குணாதிசயங்களை பாராட்டிக் கொண்டிருக்கும்போதே அல்லவா அவர்களின் இறப்பு செய்தி. இறந்த பிற்பாடும் அல்லவா அவரை பாராட்டும் வண்ணம் செய்துவிட்டிருக்கிறார். தமது அத்தனை அவயங்களையும் தானமாக முன் கூட்டியே அறிவித்து விட்டு இறந்து இமயத்தின் உச்சிக்கு அல்லவா சென்றுவிட்டார். இறந்த பிற்பாடு எல்லோர்க்கும் உதவுங்கள், உங்களின் உறுப்புகளை தானமாக அளித்து என்று கதையில் சித்தரிப்பது கதாசிரியரை பாராட்டின் உச்சத்திற்கு அழைத்து சென்று விட்டது.
"அவள் அப்படித்தான்" இந்த கதை முழுக்க சமுதாய விழிப்புணர்வுகள் நிறைந்து கிடக்கிறது. எதை சொல்வது??? அத்தனையும் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய விடயங்கள்.
கதையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சிறு சருக்கல். அம்மா அப்பா இறந்த பிறகு 90 சதம் பிள்ளைகள் அவர்களின் சொத்து அல்லது சேமிப்புகளை தனக்கே உரியதாக்கிக் கொள்ளத்தான் விரும்புவார்கள். அதற்கு எவரும் இடையூறுகள் தரும் பட்சத்தில் அடி தடி இல்லாமல் இருப்பது மிகக் குறைவு. இக்கதையில் சண்முகம் தனது அம்மா சேர்த்து வைத்த மிகப் பெரிய தொகையான அந்த இரண்டு இலட்ச ரூபாயை கோபால் பெயரில் எழுதி வைத்தும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமை என்பது சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு வேளை மனசாட்சி உள்ள அந்த 10 பேர்களில் சண்முகத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
சமுதாய விழிப்புணர்வினை ஒவ்வொரு வரியிலும் அதுவும் இந்த சிறு கதையில் அவ்வளவு பெரிய பல விஷயங்களை கூறிய அபி அவர்களுக்கு ஒரு சபாஷ் போடாமல் இருக்க இயலாது. மொத்தத்தில் கதை அருமை..
அவள் அப்படித்தான்... மிக மிக நல்லவள்..
இந்த படைப்பினை எழுதியது நான்தான் என்பதனை உறுதி அளிக்கிறேன்.