பொள்ளாச்சி அபி சிறுகதை திறனாய்வு போட்டி ==கதை சுத்தம்

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி.
கதை= சுத்தம்.

அழுக்குகளைச் சுமந்த சமுதாயத்தின் சுத்தத்தை சுதந்திரத்தின் பின்னரான தேசிய சூழ்நிலையோடு ஒப்பிட்டு பார்த்திருக்கும் கதாசிரியர் வாழைப்பழத்துள் ஊசியை ஏற்றியது போன்று மிகப்பெரிய விழிப்புணர்வு கருத்தை ஆழமாகச் சொல்லியிருக்கும் சிறுகதையே சுத்தம். “அலுவலகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதல்ல சுத்தம் அழுக்குகளாய் வேர்விட்டுக் கிடக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் இலஞ்சம் ஊழல் மோசடி மற்றும் இன்னோரன்ன விஷயங்களையும் அகற்றுவதில்தான் இருக்கிறது தேசத்தின் சுத்தம்” என்ற மையக்கருவை வைத்து தனக்கேயுரிய நக்கலுடன் வரதட்சணை இல்லாமல் வந்த மருமகளை ஆட்டிப்படைக்கும் மாமியாரின் தோரணையில் ஆங்காங்கே குத்திக்காட்டியிருப்பது கதையின் சிறப்பு.
. கறுத்து,குச்சிகுச்சியான கைகால்களுடன்,சராசரிக்கும் அதிகமான உயரத்துடன்,மங்கிப்போன அழுக்குவேட்டியும்,அதே வண்ணத்திலான துண்டு ஒன்றும் தோளில் கிடக்;க,வாசலில் வந்துநின்றார் ஒருவர். பலநாட்களாக மழிக்கப்படாத தாடியில் பழுப்பேறிக் கிடந்தது.நரைத்துப்போன முடியின் அடர்த்தியைப் பார்த்தால், அந்த வயசாளிக்கு, வயது அறுபத்தைந்துக்கும் மேலிருக்கும்.வயிறு ஒட்டிப்போயிருந்தது. என்று உலகத்தரத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது மங்கிப்போயிருக்கும் தேசத்தின் வளர்ச்சியையும் உடைகளின் அழுக்கைக்கொண்டே ஊரின் அழுக்கையும் நரைத்துப்போன முடியின் அடர்த்தியைப்பார்த்தால் வயது அறுபத்தியைந்துக்கும் மேலிருக்கும் என்று நாடு சுதந்திரம் அடைந்து அறுபத்தியைந்து வருடத்திற்கு மேல் என்பதையும் துப்பரவு செய்வதற்காக வரும் மனிதரை உவமானம் காட்டி நாடு வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் இருக்கும் நிலையை, ஒரு சிறிய பத்தியில் மிகத் தெளிவாக சொல்லக் கையாண்டிருக்கும் கதாசிரியரின் உத்தி ஆச்சரியத்தின் எல்லை
ஒரு மனிதனை எடைபோடுதல் என்னும்
தவறான கண்ணோட்டத்தின் அழுக்கை, நோஞ்சான் மாதிரி வந்த ஒருவன் அந்த அலுவலகத்தில் அவனிலும் ஆரோக்கியமாய் இருக்கும் ஒருவன் செயாததிலும் அதிகம் செய்து அசத்தியதாய் எடுத்துரைத்து உரைக்கவைத்திருப்பது உயர்ந்தவர்களின் கீழான பார்வை என்னும் மனக்குருட்டை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது, உதாரணத்துக்கு கீழ்கண்ட இந்த பத்தியைக் கூறலாம்.“ரெக்கார்டு ரூம்,ஸ்டாப் ரூம்,கழிப்பறைகள் என எல்லாவற்றிலும், அழுக்கு..அழுக்கு.. லஞ்சம், ஊழலைப்போல இண்டு இடுக்கு எல்லா இடத்திலேயும் அழுக்கு..,கால் படும் இடத்தில் அழுக்கு,கண்படும் இடத்திலும் அழுக்கு.. எல்லா இடத்திலேயும் அழுக்கு.அலுவலகம் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை துடைக்கப்படாத அழுக்கு...,வாரிசு அரசியல் போல வந்து கொண்டேயிருந்த அழுக்கு.., தண்ணீரையும்,ஆசிட்டையும் கைகளையும் பயன்படுத்தி அவை எல்லாவற்றையும் சுத்தப்படுத்தினார்.’’ அதிலும் கழிப்பறைகள் எல்லாவற்றிலும் அழுக்குஞ்சம்ல என்று லஞ்ச அழுக்கை எழுத்துக்களில் மாற்றிப்போட்டிருப்பது ஒரு அரச அலுவலகத்தில் லஞ்சம் இல்லாமல் எந்த காரியமும் நேராக நடக்காது என்று அடித்துச் சொல்லியிருக்கும் நையாண்டித்தனமான சாடல் புரிந்து உணர்ந்து வருந்தவேண்டியது.
நாட்டுக்காக வியர்வைசிந்தும் எவரையும் நாடு ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்ற கோணத்தில் பட்டினியாக வேலை செய்துகொண்டிருக்கும் அவனிடம் “நீ சாப்பிட்டாயா என்று யாரும் கேட்கவில்லை” சுட்டிக்காட்டியிருக்கும் விதம் ஜனநாயகத்தைச் சுரண்டிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சர்வாதிகாரத்திற்கான வலுவான் சாட்டை அடி. எல்லாம் சுத்தப்படுத்திய வயசாளி இறுதியில் காந்தி படத்தை கையில் எடுத்தபோது பார்த்தசாரதி வெடுக்கென்று பிடுங்கிக் கொண்ட சந்தர்ப்பத்தை வைத்து காந்தியை ஏழைகள் தொடக்கூடாது அதாவது காந்தி படம்போட்ட பணநோட்டுக்கள் ஏழைகளுக்கு சொந்தமில்லை என்னும் நோக்கத்திலும் சொல்லப்பட்டதுபோல் இரண்டு சந்தர்ப்பங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கப்படவேண்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திரம் அடைந்தபின்னும் நாடு கல்வி வளர்ச்சியில் இன்னும் பின்தங்கியுள்ளது என்பதை
வயசாளிக்கு சுதந்திரம் என்ற பெயரை வைத்து அவன் கைநாட்டு என்று இயல்பாக காட்டியிருப்பது கதைக்கு கிரீடம் அணிவித்ததாய் இருக்கிறது.
ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கி ஊரெல்லாம் புகையாக்குவதுபோல சுத்தம் என்ற வார்த்தைக்கு கை கால் கண் மூக்கென்று எல்லாம் வைத்து இறுதியில் அதற்கு உயிரும் கொடுத்து ஒட்டிய வயிறோடு ஊருக்குள் விட்டிருப்பவர் இறுதியில் உழைப்பவன் உழைத்து ஒட்டிய வயிறோடிருக்க உட்கார்ந்திருப்பவன் உல்லாச வாழ்க்கை வாழும் தேசத்தின் எழுதப்படாத தத்துவத்தை காட்டி சுத்தம் என்ற புகைப்படக் கருவியின் மூலம் தேசத்தின் தேசிய அழுக்குகளை படம்பிடித்துக் காட்டியிருப்பதில் கதாசியர் இன்னொரு பாலுமகேந்திராவாகியுள்ளார்..(திறனாய்வு என்பதால் கதையின் திறன் மட்டும் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.)

*மேற்கண்ட இந்த திறனாய்வு என்னால் எழுதப்பட்டதே என்பதை உறுதி செய்கிறேன்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Jun-15, 2:50 am)
பார்வை : 164

சிறந்த கட்டுரைகள்

மேலே