பொள்ளாச்சி அபி சிறுகதை திறனாய்வு போட்டி தல புராணம்

வணக்கம்,

தந்தைப் பெரியார் அவர்களிடம் நீங்கள் எழுத்தாளரா பேச்சாளரா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டப்பொழுது, நான் எழுத்தாளனும் அல்ல, பேச்சாளனும் அல்ல ஒரு கருத்தாளன் என்று கூறினாராம். அதே போல் நானும் ஒரு எழுத்தாளனும் அல்ல, கவிஞனும் அல்ல ஒரு கருத்தாளன், எனக்குத் தெரிந்த கருத்துக்களை கூறிக்கொண்டு இருக்கின்றேன், நான் சொல்கின்ற கருத்துதான் சரி என்றோ நான் சொல்வதை நீங்கள் நம்பவேண்டும் என்றோ எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை.

யார் எதை சொன்னாலும் உங்கள் சொந்த மூளைக்கு கொஞ்சம் வேலைகொடுத்து பிறகு அதை நம்புவதா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள், எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு எந்த ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும் உரிமை இருக்கிறது.

500 ஆண்டுகளுக்கு முன்னாடி காவல்த்துறையினர்கள் எப்படி இருந்து இருப்பார்கள் என்று இந்துமதி கேட்டப்பொழுது, எதையும் ஏன் எப்படி எதற்கு என்ற கேள்வியை கேள் என்று சொன்ன பெரியாரின் சிந்தனை நறுக்கென மனதில் எழுந்தது.

ஆசிரியர் அபி அவர்கள் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பது இந்த தளம் மட்டுமல்ல, தளத்திற்கு வெளியேயும் பலர் அறிந்த உண்மை. இந்த தல புராணம் என்ற சிறுகதையை ஏற்கனவே நான் வாசித்து இருக்கின்றேன், மிகவும் என்னை கவர்ந்த படைப்புகளுள் இதுவும் ஒன்று.

திறனாய்வு எழுதுகின்ற அளவிற்கு எனக்கு திறமை இல்லை என்றாலும்கூட, எழுத வேண்டும் என்ற எனது அற்ப ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மட்டுமல்ல, ஆசிரியர் அபி அவர்களைப் பற்றி எழுத வேண்டுமென்ற ஆவலும் என்னை எழுதத்தூண்டிவிட்டது, அதன் விளைவாகவே இந்த கருத்துரையை இங்கே பதிவிட்டிருக்கின்றேன்.

தலபுராணம் தார்சாலையில் எதார்த்தமாக தொடங்கி, எப்போதோ நாம் கண்ட அல்லது எப்போதோ நாம் அனுபவித்த உணர்வுகளைப்போல் காட்சிகள் மனதிற்குள் ஊடுருவி, ஒரு அழுத்தமான உணர்வோடு முடிந்திருக்கின்றது.

கதையின் ஓட்டம் தடுமாற்றமின்றியும், வார்த்தைகளின் கோர்வைகள் பிசிறுகள் தட்டாமலும் நேர்த்தியாக எழுதப்பட்டு இருக்கின்றது. சொல்ல வந்த விடயங்களில் எங்கேயும் தொய்வு இல்லாமல் சரியாகவே நகந்து இருக்கின்றது கதை.

கதையின் உள்ளே நுழைந்தபிறகு சில இடங்களில், சில நினைவுகள் என்னுள் நியாபக அலைகளாக பொங்கி எழுந்தன, குறிப்பாக “இந்த ஊருக்குன்னு இருந்த ராசா ரொம்ப கொடுமைக்காரனா இருந்தானாம்.அவன் ராசாவாகிப் போனதாலே அவன் வெச்சதுதான் சட்டம்.யாரும் கேள்வி கேப்பாரு இல்லையாம்.., எல்லா நெலமும் ராசாவுக்குத்தான் சொந்தம். அதிலே வேலை செய்யறதுக்கு இருந்த ஜனக் கூட்டத்துக்கு அவங் குடுக்கறதுதான் கூலி'' - என்ற வரிகளை வாசித்த அதே நேரம் 1968 ஆம் ஆண்டு கீழ் வெண்மணியில் நடந்தப் படுகொலைச்சம்பவத்தை நியாபகமூட்டியது.

தல புராணம் என்ற இந்த கதையின் தலைப்பிற்கு
ஏற்றதைபோல் கரு அமைந்திருக்கின்றது, கோவிலின் வரலாற்றுக்ககதையை வேல்முருகனிடம் பூசாரி சொல்வதுதான் கதையின் முக்கியமான காட்சி, அதுமட்டுமல்ல முக்கியமான கருவும் அதுதான் என்று நினைக்கின்றேன். கதையின் விவரிப்புகள் என்பது நன்றாக இருக்கின்றது.

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தலபுராணம் நிச்சயம் இருக்கும், புராணம் என்பது பழைய காலத்தில் வாயால் சொல்லப்பட்ட கதைகளே ஆகும். தனது மனிதில் தோன்றுகின்ற அனுமானங்களை கதையாக சித்தரித்து, அதை நிகழ்ந்தவைபோல திறமையாக கூறுபவர்களும் உண்டு அல்லவா?.

வாய்வழியாக சொல்லப்பட்ட கதைகள் ஒருவர்மாற்றி ஒருவர் என்று வாய்ப்பரிமாற்றத்தோடு மாறி மாறிச் சொல்லுவார்கள். அப்படிச் சொல்லும்பொழுது. ஒவ்வொருவரும் சில சாத்தியமில்லாத அறிவிற்கு அப்பாற்பட்ட விடயங்களை சேர்த்து திரித்துக் கூறிவிடுகிறார்கள். இது சுவராசியதிற்கும், கேட்பவர்களை அதிசயிக்கவைத்து அவர்களின் பாராட்டுக்களை பெறுவதற்குமான யுத்தியாக ஒருபுறம் இருந்தாலும் கூட. இப்படிப்பட்ட கதைகளை முதன் முதலில் கூறியவர்கள், இதன் மூலம் தங்கள் கடவுள் கொள்கைகளையும், மதக்கொள்கைகளையும்கூட பரப்புவதற்கு சரியாகப்பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் மறைமுகமான உண்மையாகும். இப்பபட்ட கதைகளை கொண்டுதான் பிற்காலங்களில் புராணங்கள் எழுதப்பட்டன என்பது எனது நம்பிக்கை ஆகும்.

ஆசிரியர் அபி அவர்களும் மேலே உள்ள காரணங்களை கருவாகக் கொண்டுதான் கதையை நகர்த்தி இருக்கின்றார் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது, கதை படிக்க படிக்க சலிக்கவில்லை.

பொதுவாகவே கதையில் சில இடங்களில் பிறமொழி சொற்கள் தவிர்க்க முடியாதவைதான், ஆனால் சில இடங்களில் மட்டுமாவது ஆங்கிலச்சொர்களை இன்னும் குறைத்துத் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி இருக்கலாமோ என்று தோன்றுகின்றது. ரவிக்கை, புகட்டிய, தண்ணீர்குப்பி, அலங்கார விளக்குகள், புகைப்படம் என்று எல்லாம் நல்லத் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி இருக்கின்ற ஆசிரியர். ரிங்க்டோன்கள், லெப்ட் சைட், கேமரா, லென்சு, ஜூம், க்ளிக் போன்ற ஆங்கிலச்சொற்கள் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று மறுஆய்வு செய்யத் தவறிவிட்டதாகத் தோன்றுகிறது. இது ஆசிரியருக்கே வெளிச்சம்.

''பூசாரியின் தலபுராணம் இந்துமதிக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. “ஏங்க..ஐநூறு வருஷத்துக்கு முன்பு போலீசுக்காரங்க.., தற்கொலைன்னு கேசு..இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையேங்க..!”

“அட மண்டூ..,இன்னுமா உனக்குப் புரியலே..!,ஐநூறு வருஷம்கிறதை,ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்..னுங்கிற மாதிரி யோசிச்சு பாரு..எல்லாம் சரியா வரும். அம்பது வருஷத்துக்கு முன்னேன்னு தலபுராணம் சொன்னா,அது வெறும் சம்பவமாப் போயிடும்.ஐநூறு வருஷத்துக்கு முன்னே..ன்னு சொன்னாத்தான் அது தல வரலாறாகும். இவங்களுக்கு இப்படி சொன்னாத்தான் வசதி.மரியாதை..தெரிஞ்சுக்கோ..!” இந்துமதிக்கு இப்போது தெளிவானது.

மேல உள்ள பத்திகளில் ஆசிரியர் குறிப்பிட்ட வரிகள் வாசர்கர்களின் மனதை தெளிவுப்படுத்துகின்ற மிக முக்கியமான வரிகளாகும். இந்த கதைக்கான உயிரோட்டமே இந்த இரண்டு சிறு பத்திகளில்தான் இருக்கின்றது. 50 வருட நிகழ்வை 500 வருடம் என்று பூசாரி சொல்கிறார், இதற்குப் பின்னே வருகின்றவர்கள் 5000 என்று சொன்னாலும் சொல்லுவார்கள். ஏனென்றால் சாமியைப்பற்றி இவர்கள் புராணக் கதை சொல்ல வேண்டும் என்றால் இப்படித்தான் உலகம் தோன்றியதிலிருந்து என்று குத்துமதிப்பே இல்லாமல் தொடங்கிவிடுவார்கள். மேலே காட்டியுள்ள இரண்டு பத்திகளைப்பார்த்தால் வேல்முருகனும், இந்துமதியும் பகுத்தறிவுவாதிகளைப்போல் தோன்றுகின்றது, அப்படியிருக்க இவர்கள் எதற்காக கோவிலுக்கு போகவேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. ஒரு வேலை அவர்கள் பக்தர்களாக இருந்தாலும்கூட எதற்காக கோவிலுக்கு போகிறார்கள் என்றும் கூறப்படவில்லை. (சாமி கும்பிட போனார்கள் என்றுதான் நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்).

மற்றப்படி என் மனம்கவர்ந்த பகுத்தறிவு மிகுந்த படைப்புதான் இந்த தல புராணம் சிறுகதை, இதைபோல் பகுத்தறிவிற்கு உகந்த பலப்படைப்புகளை ஆசிரியர் அபி அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

தல புராணம், ஒரு நல்ல சிறுகதை.

நன்றிகளுடன்
நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (31-May-15, 3:28 pm)
பார்வை : 144

மேலே