நழுவும் நாணயங்கள்
கம்பன் முதல் தாசன் வரை
கவிப்பாடி தீர்த்த மொழி
வள்ளுவன் முதல் வைரன் வரை
வாகைசூடிப் பார்த்த மொழி
எல்லைகள் கடந்த என்னுயிர் தமிழ்மொழி
இன்று அழிவின் விளிம்பில்
நழுவும் நாணயமாய்…
இடக்கரம் தேடும் இளையமகளை
இறுக்கி மார்போடணைத்து
தன் மானங்காக்கும்
என் ஈழச்சகோதரியின்
இதழ்களைவிட்டு
இன்றுவரை - புன்னகை
நழுவும் நாணயங்களே …
பெண்ணை சதையெனும் விழிகளை
சிதையிட்டு கொளுத்த வேண்டாமா?
பெண்ணின் துயிலுரிப்பில்
பெற்றது இப்புவி பெரும்பாரதத்தை
இன்னும் இதையறியா மூடர்களே
உங்கள் மனம் காரிருள்தனில்
நழுவிய நாணயங்களோ?
காப்பியக் காதலுக்கு கண்ணீரையும்
களத்தினில் காதலுக்கு காலனையும்
பரிசளிக்கும் என் வேடிக்கை
விந்தை நாகரீகச் சமூகத்தில்
இன்னும் எத்தனை மலர்கள்
மரணத்தின் தோட்டத்தில்
நழுவும் நாணயங்களோ ?
இன்று
ஏழ்மையைவிட்டு கல்வி,
எளிமையைவிட்டு உயர்வு,
அரசியலைவிட்டு பொதுநலம்,
ஆலயங்களைவிட்டு ஆன்மீகம்,
மருத்துவம்விட்டு மனிதநேயம்
நழுவும் நாணயங்களே…
பெண்ணே
விளம்பரங்களுக்கு மட்டும் வந்துபோக
நீ விளைபொருளல்ல,
உடைகளின் தளர்வு
நீ உற்ற சுதந்திரமுமல்ல
பார்வைகள் மாறாதவரை
பாதைகளின் மாற்றத்தால்
பயனேதுமில்லை…
தன்னிலை உணரடி தோழி
எந்நிலையிலும் நழுவா நாணயம் – நீ
என்பதை உலகிற்கு
உரக்கச் சொல்லடி இந்த நாழி !!!