கொட்டித் தீர்க்கிறேன்

தாழிட்ட நாழிகைகள்
கோலோற்றி
நகைக்கும் காரணம்
ஊர் விட்ட வம்புகள்
பேர் சொல்லும்
அம்புகளாய்
வேறிடத்தில் தங்காமல்
என் வேரிடமே
நேரிடையாய் தாக்கியது

சோகம் சூழ
மேகம் திரட்டினேன்
திரண்ட கூட்டத்திடம்
தாகம் என்றேன்
அமிலம் கொட்டியது

உதவ வராதவர்கள்
ஊத வருகிறார்கள்

எட்டிப் பார்த்து
எதுவும் பேசும்
சரியாய் வேகாத மனிதர்கள்
இவர்கள்
போகாத தூரமில்லை
தூராத நேரமில்லை

தூங்காமல் தூற்றுவார்கள்
தயங்காமல் தள்ளிவிடுவார்கள்

சாய்த்து கொள்வது போல்
என்னை
சாய்த்து கொல்லும்
சொற்கள்
தேளாய் கொட்டும்
தோள்கள்

என்னை செரித்து
சிரிப்பு ஏப்பம் விட்டு
என் உணர்வுகளை
கொலை செய்யும்
உணர்வு திண்ணிகள்

ஊமையின் பேச்சையும்
தானே பேசும்
பேச்சு விழுங்கிகள்

விஷப் பாம்பின்
முட்டைகளை தந்து விட்டு
அதில்
புறாக்களை தேடும்
புதுமை வியாதிகள்

நான்
கடல் ஏற போனால்
கடல் ஏவ
புயல் ஏறி வருகிறார்கள்
சோர்வு ஏவல்காரர்கள்

சாக்குத் துணியால்
அலங்காரம்
பொய் சாட்டைகள்
ஆனால்
மெய் அடிகள்

கை கொடுத்து
செயல் அறுக்க
செயல்படும் அரக்கர்கள்

வெற்றி தேடும்
என்
நெற்றி தேடுகிறார்கள்
குங்குமம் வைக்க அல்ல
குண்டு துழைக்க

இடறலாய்
இருக்கவே
இடறிப் பிறந்த
இடறல்களால்
இன்னல்கள்
இன்றைக்கும்
இன்னும் இருக்கிறது

எழுதியவர் : Raymond (2-Jun-15, 2:40 pm)
பார்வை : 102

மேலே