அந்தப் பள்ளியை மூடப்போகிறார்கள்

அந்தப் பள்ளியை
மூடப்போகிறார்கள்
மாணவர் சேர்க்கைக் குறைவு
தனியார்ப்ப்பள்ளி மோகம்
தேர்ச்சிவிகிதச் சரிவு
கட்டமைப்பு வசதியின்மை
.
.
காரணங்கள்
அடுக்கப்படுகின்றன
மூன்றாம் வகுப்பு
முத்துச் செல்விக்கு
அழுகையாக
வருகிறது
அவள் தினமும்
நீரூற்றும்
ரோஜாச்செடியில்
அன்றைக்கென்று
அவ்வளவு மலர்கள்
அவள்
வழக்கமாக
அமரும்
அந்தப் பெஞ்சு
இனி
அனாதை ஆகிவிடும்
கடைசியாக
நடத்திய
அந்தப்பாடம்
அழிக்கப்படவில்லை
இன்னும்
கரும்பலகையில்
தண்ணி இல்லாக்
காட்டுக்கு
மாற்றப்பட்டுவிட்ட
முருகேசன் சாரின்
அலைபேசி எண்
எழுதப்பட்ட
துண்டுச்சீட்டு
அவள் கையில்
வியர்வைப் பிசுக்குடன்
மீண்டும் மீண்டும்
பள்ளியைச்
சுற்றிச் சுற்றி வந்தும்
தீரவில்லை
அவளுக்கு
வெளியேற
மனமில்லாமலேயே
வெளியேறுகிறாள்
அவள்
அந்தப் பள்ளிவிட்டு
ஓர் அகதியைப்போல
அவள்
வீடு செல்லும்
வழியில்
திறந்திருந்த
டாஸ் மார்க்கில்
அந்த நேரத்திலும்
வாடிக்கையாளர் கூட்டம்
களை கட்டியபடி
தன்னிச்சையாக
மூக்கைப்
பொத்திக் கொள்கிற
முத்துச் செல்வியின்
பிஞ்சு மனதில்
வெள்ளந்தியாய் எழுகிறது
ஒரு கேள்வி

" இது மட்டும்
திறந்திருக்கு
இதையெல்லாம்
மூட மாட்டாங்களா ? "

# SUPPORT NANDHINI #

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (4-Jun-15, 11:49 am)
பார்வை : 780

மேலே