குடிமக்களை குடி மக்களாக்க - கற்குவேல் பா
குடிமக்களை குடி மக்களாக்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊருக்கொன்றாய்
ஒளிவு மறைவில்
அரங்கேறிய
மது விற்பனை
ஓரிரு இறப்புகளை
சுட்டிக் காட்டி
வீதிக்கு வீதி
திறந்த அவலம் .. !
* * *
உணவுப் பொருளில்
இரசாயன மிகுதியாம்
இழுத்து மூடலாம்
அந்த நிறுவனத்தை
இரவில் உணவான
இரசாயன மது
இங்கே இழுத்து
மூடுவார் யாரோ .. !
* * *
கணவனை இழந்த
கவலை எதற்கு
தந்தையை இழந்த
சோகம் எதற்கு
நூறுநாள் அரசாங்க
வேலை இருக்கு
இலவச இன்சுரன்சு
பணம் இருக்கு .. !
* * *
கோடிக்கணக்கில்
இலாபம் தருகிறதாம்
அரசாங்க - மது
விற்பனை கூடங்கள்
நாளுக்கு நாள்
ஆயிரக்கணக்கில்
உயிர்களைக் குடித்தால்
தவறாகுமோ என்ன .. !
* * *
இரவில் தனிமையில்
காம வெறிகொண்டு
அலையும் காளையரே
கலங்கிட வேண்டாம்
மலிவு விலையில்
விலைமாதர் காணும்
அரசாங்க விடுதிகளும்
ஒருவேளை திறக்கப்படலாம் .. !
* * *
குடி குடியைக் கெடுக்கும் ,
சிந்திப்பீர் தோழர்களே ..
** I support NANDHINI
-- கற்குவேல் . பா