புழுக்கள்
அவை ரகசியமாய் ஒளிந்திருக்கின்றன
மிகவும் ரகசியமாய்…
அவை பிறக்கும்போது
அழகாய்ப் பிறந்தன
சிறகாய்ச் சிலிர்த்தன
அவற்றின் சிறகுகள்
சுகமென்றாலும்
புழுக்களாய் நெளியும்
வரம் பெற்றன...
அவற்றின் நிறங்கள்
அழகென்றாலும்
கறுத்த அறைக்குள்
சிறைப்பட்டன
அவை,
நீங்காமல் நீங்காமல்
நிலைத்துவிட்ட நிஜங்கள்
தூங்காமல் துரத்துமந்த
நிஜங்களின் நிழல்கள்...
எரித்தால் எரியாது
புதைத்தால் மடியாது
அழித்தாலஅழியாது
மறந்தால் மறக்காது
எனில்
கரைந்தால் கரையுமோ..
உருகி உருகி
கனிந்தால் மறையுமோ..
இளகி இளகி
பரிந்தால் விலகுமோ..
ரகசியமாய் ரகசியமாய்
ஒளிந்திருக்கும்
மனக்கூட்டில் பாவங்கள்...?
மனக்கூட்டில் பாவங்கள்...? (2013)
(கடவுளின் நிழல்கள் நூலிலிருந்து )