மது எனும் அரக்கன்

குடியெனும் அரக்கன்
குணங்களை அறுப்பான்
குடும்பத்தை குலைப்பான்
குழந்தையை மறப்பான்

இள உடல் சிதைப்பான்
இன்னல்கள் கொடுப்பான்
இம்சைகள் அளிப்பான்
இருளினில் அடைப்பான்

இயந்திரமாக நாளும்
இயங்கிடும் உலகில்
இதயத்தை உடைக்கும்
இளவிஷம் மதுவே

வரம்புகள் மீறும்
வன்முறை கூடும்
தரம்கெட்ட மதுவில்
தள்ளாடல் ஏனோ ?

உடம்பினை தின்னும்
உயிரைக் கொல்லும்
உண்மைகள் மறைக்கும்
உறவுகள் அறுக்கும்

விஷமென தெரிந்தும்
விரும்பிடும் கலக்கம்
விரல்களில் நடுக்கம்
விடிந்தபின் தயக்கம்

மானத்தை இழக்கும்
மனிதர்கள் வெறுக்கும்
மாலை வரைக்கும்
மனமும் தவிக்கும்

குற்றங்கள் கூடும்
குடும்பங்கள் வாடும்
குரங்குகள் போலே
குணங்களும் தாவும் ?

சாக்கடை போலே
சாலையில் நாளும்
சரிந்து நீ கிடந்தால்
சந்திகள் சிரிக்கும்

உயிரினைக் கொல்லும்
உண்மைகள் தெரிந்தும்
உணர்வின்றி நீயேன்
உழல்கிறாய் குடியில்

பார்ட்டியில் தொடங்கி
பாதையை மாற்றும்
பார்களை நாடி நீ
பாயாதே தோழா

இளைஞனே உன்னுள்
கனவுகள் இருக்கு
உன் நினைவுகள் கொல்லும்
துளிவிஷம் எதற்கு ?

மது எனும் அரக்கன்
மறு எமன் என்று
மனமது உணர்ந்தால்
மாறிடும் எல்லாம்

குடில்களை சிதைக்கும்
குடியினை விரட்ட
'குடிமகன்' நீயும்
குதித்திடு களத்தில்

மதுவிற்ற காசில்
மாநிலம் நடத்த
மானங்கெட்டு
மறு தேர்தல் வேறு

தன்னிலை உணர
தன்குடும்பங்கள் உயர
தாமதிக்காமல் ..நீ
"தள்ளிடு மதுவை "
-------------------------------------------------
# I Support Nandhini #
குமரேசன் கிருஷ்ணன்

(நண்பர் சரவணாவிற்கு வாழ்த்துக்களும் , நன்றிகளும்)

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (5-Jun-15, 10:00 pm)
Tanglish : mathu yenum arakkan
பார்வை : 798

மேலே