காதல் ஒரு சிட்டிகை

என்னுடைய
இறுக்கமான
திங்களையும்
தளர்வான
ஞாயிறு ஆக்குகிறது
காலைவணக்கம்
தாங்கிவரும்
உன்னுடைய
அலைபேசிக் குறுஞ்செய்தி

========================

இன்னும்
அஞ்சு நிமிஷம்
தூங்கிக்கறேனே.
என்று
புரண்டு படுக்கும்
சிறுவனைப் போல
இன்னும்
அஞ்சு நிமிஷம்
பேசிக்கறேனே
என்று கெஞ்சுகிறேன்
புறப்பட ஆயத்தமாகும்
உன்னிடம்

========================

பரிசோதனை
முயற்சியில்
நீ செய்து
கொண்டு வந்த
பூண்டுக் குழம்பில்
உப்பு கச்சிதம்
காரம் கனக்கச்சிதம்
காதல் மட்டும்
ஒரு சிட்டிகை
அதிகம்

========================

அலைபேசிக்கு
அழைப்பு
உன்னிடமிருந்தென்றால்
சட்டென்று எழுந்து
அறைக்கு வெளியே
ஓடுகிறேன்
சட்டென்று எழுந்து
தேசிய கீதத்திற்கு
நிற்பதைப் போல

========================

மேனியழகு பெற
மிகச்சிறந்தது
என்று
ஒரு சோப்பைப்
பரிந்துரைத்தாய் .
மேனியழகு பெற
எனக்கு
எந்தச் சோப்பும்
தேவையில்லை
நீ குளித்த
சோப்பு போதும்

========================

நீ
அச் என்று
தும்மினாலும்
எனக்கு
ஒன்ஸ்மோர்
கேட்கத் தோன்றுகிறது

========================

காய்ச்சல்
வந்த வாய்க்கு
எல்லாமே கசக்கும்
காதல்
வந்த வாய்க்கு
எல்லாமே இனிக்கும்

========================

விடைபெற்றுக் கிளம்பும்
உனது பின்னழகையே
பே என்று
பார்த்துக் கொண்டு
நிற்கிறேன்
சட்டென்று
திரும்பி
ஒரு குழந்தையைப் போல
புன்னகைத்து
டாட்டா காட்டுகிறாய்
எனது
பார்வையின்
அத்தனை அழுக்கையும்
துடைப்பது போல

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (7-Jun-15, 10:47 am)
பார்வை : 450

மேலே