வயோதிகக் காதல் - கற்குவேல் பா
![](https://eluthu.com/images/loading.gif)
வயோதிகக் காதல்
* * * * * * * * * * * * * * * *
மங்கலான
பார்வையிலும்
அழகாய்த் தெரியும்
உந்தன் முகம் ..!
தள்ளாடும்
நடையிலும்
பிரியாத
உன் விரல்கள் ..!
தோல் சுருங்கிய
நாட்களிலும்
துணையாக
உந்தன் தோள்கள் ..!
மூக்குக்கண்ணாடி
தேடலில் இன்னும்
குறையாத - உன்
செல்லச் சண்டைகள் ..!
நீ தோளில்
சாய்கையில்
மறந்துதான் போகிறது
என் வயது ..!
நீ முத்தமிடுகையில்
ஒரு துளி
குறைந்தே போகிறது
என்னில் சர்க்கரை ..!
உன்
மருத்துவ அறிக்கை
என்னில்
கூட்ட மறுத்ததில்லை
இரத்த அழுத்தத்தை ..!
பிள்ளைகள் பிரிந்த
கவலையில்லை
நீ அருகில்
உள்ளவரை ..!
அறுபது கடந்தும்
உடல்கள் தளர்ந்தும்
தளரார அன்புடன்
தழுவும் - நம் இதழ்கள் ..!
நானில்லாத
ஒரு தனிமையை
நொடிப்பொழுதும்
தாங்கிடாதவள் நீ ..!
கண்டிப்பாக
எனக்குமுன்
நிகழ்ந்து விடட்டும்
உன் மரணம் ..!
உன்னைத்
தழுவிய மரணம்
அக்கணமே
என்னையும்
தழுவிச் செல்லட்டும் ..!
-- கற்குவேல் பாலகுருசாமி