தப்புக்கணக்கு
பேரூந்தின் நெரிசலுக்குள்
முட்டி மோதி மூச்சுத் திணறி
முன்னே நகர்ந்திட இடைவெளி தேடி
ஜனப்பெருக்கத்தை எண்ணி
மனதுக்குள் நொந்து
மறுபடி நகர எத்தனித்தேன்
இப்போது .என் மனம் ஆற்றாமையில் ,.................
சலிப்புற்ற விழிகளில்
துழாவிய கணங்களில்
ஆடவன் அருகில் நிற்க
இருக்கையில் ஓரழகிய தேவதை
பளிச்செனத் தெரிந்தாள்
இப்போது என் மனம் ஆச்சரியத்தில் ..................
எதிரமர்ந்த
தாயமடி மழலையை
சீண்டி மகிழ்வித்து
ரசித்துக் கொண்டிருந்தாள்
அவர்களின் சிரிப்பலை
எனக்குள்ளும் வீசியது
இப்போது என் மனம் மகிழ்ச்சியில் ......................
அந்தோ!
முதுகு வளைந்த மூதாட்டி
சுருங்கிய தோலுடன்
நடுங்கிய உடலுடன்
அழகியை நெருங்கினாள்
இப்போது என் மனம் பரிதாப உணர்வில்...............
ஒரு நொடி
அத் தேவதையின்
வேதனைப் பார்வை
வெளித்தெரிந்தது
அடுத்த கணமே
சரேலென திரும்பி
வெறித்த பார்வையை
யன்னல் வெளியே வீசினாள்.
இப்போது என் மனம் வெறுப்பில்................
வயோதிப மாதுக்கும்
இரங்காத மங்கையா ?
உருவத்தில் அழகிருந்து
என்ன பயன்
உள்ளம் அருவருப்பாயிருக்கிறதே
இப்போது என் மனம் கோபத்தில் .................
அதோ!
பேரூந்து நிறுத்தத்தில்
அருகில் நின்ற ஆடவனவளை
குழந்தையாய் தூக்கிச் சுமந்து
வெளியே நகர்கையில்
சேலை விலகி
வெளித்தெரிந்தன சூம்பிய பாதங்கள்
இப்போது என் மனம் குற்றவுணர்வில்.................
-வளர்மதி சிவா

