பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி -- அவரது சொந்தங்கள்

இந்த சிறுகதை ஒரு பிரபல சிறுகதை எழுத்தாளர் தன் சொந்தங்கள் என்று யார் யாரை நினைக்கிறார் என்பதைக் கூறும் கதை; அதே சமயம் அவருக்கு சொந்தம் என்று யாருமே இல்லை என்றும் கூறும் கதை! நன்கு ஆழமாக சிந்திக்க வைக்கும் கதை!
சொந்தங்கள் என்று அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஆட்கள் இருக்கும்போது, அவருக்கு சொந்தம் என்று யாரும் இல்லை என்று எப்படி கூற முடியும் என்று கேட்கலாம் . அதனால்தான் கூறுகிறேன் இது ஆழமாக சிந்திக்க வைக்கும் கதை .என்று!
அவர் உயிருடன் உண்மையில் உலவும் மனிதர்களை சொந்தங்கள் என்று தேர்ந்தெடுத்து இருந்தால்
அவருக்கு சொந்தம் என்று யாரும் இல்லை என்று சொல்ல முடியாதுதான். ஆனால், அவர் தன் பல சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்களை அல்லவா சொந்தங்கள் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்! ஆம்!
அவரது அறையில் அவரைப் பார்க்க வந்து காத்திருந்த ஒவ்வொருவருமே, அவர் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள்தான்! கௌசல்யா உள்பட!
சரி! அவருக்கு ஏன் அப்படி தோன்றுகிறது? நோய் வாய்ப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது உடல் மட்டுமின்றி மனமும் பலவீனமாக இருக்கிறது! அவரைப் பார்க்க சொந்தங்கள்
என்றும் யாரும் வரவில்லை! சிறுகதைகளால் புகழ் பெற்றாரே ஒழிய புகழும் கூட்டத்திலிருந்தும் யாரும் வரவில்லை! ஒரே ஒரு சொந்தமாக இருந்த மனைவியும் முதல் பிரசவத்தில் குழந்தையுடன் போய்ச் சேர்ந்து வருடங்கள் கடந்து விட்டன! கதைகளை ரசித்து ரசித்து எழுதி, பாத்திரங்களோடு ஒன்றி விட்டதால்,மனது பலவீனமான நிலையில் பாத்திரங்கள் உயிருடன் இருப்பது போலவும், சொந்தங்கள் போலவும் மாயையான கற்பனை தோன்றுகிறது!
கதையின் முடிவு நெருங்கும் வரை நாமும் அந்த அறையில் கூடியிருந்த ஆட்களை உண்மையான மனிதர்கள் என்றே நினைக்கிறோம்! அவர் கதையின் பாத்திரங்கள் என உணரவில்லை! முடிவில்,அதை நாம் உணரும்போது, ------- -----
--------ஆகா! கதைக்குள் சூரியன் மறைந்து,இருள் ஆனாலும்,கதை நம் மனதில் பல சூரியன்களைப் போல் பிரகாசிக்கிறது! அப்படி எழுதினால்தான் கதை சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், அபி அவர்கள் அவ்வாறு எழுதியிருக்கிறார்! மஞ்சுளாவும், கௌசல்யாவும் உண்மை மனிதர்கள் என்று கதை முடிவிலும்,என்னைப் போல் சிலர் நினைத்திருப்போம். இரண்டாம் முறை ஆழ்ந்து படிக்கும்போது,அவர்களும் கதா பாத்திரங்கள்தான் என்று புரிந்து விடும்! இது அவசரமாகப் படிப்பதற்காக எழுதிய கதை அல்ல! பொறுமையாகப் படித்து,ஆழ்ந்து சிந்திப்பதற்காக எழுதிய கதை.

அவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த மாரியப்பனைத் தவிர அந்த அறையில் வேறு யாருமில்லை.தனக்கு வேலைக்காரனாக, சமையல்காரனாக , சகோதரனாக , ஏன் தாயுமானவனாகவே இருக்கும் மாரியப்பனைக் கூட அவர் சொந்தக்காரனாக நினைக்கவில்லை! பார்க்கப் போனால் , அவன்தான் உண்மையான சொந்தம் என்று நினைக்கப்பட தகுதியானவன்.
அன்பு காட்ட ஆள் இல்லாத அனாதையாக ஒரு எழுத்தாளன் நோயால் சாக நேரிடும்போது, அவன் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் பொள்ளாச்சி அபி! ஆழமாக சிந்திக்க வைத்த அற்புதமான கதையை எழுதிய அபி அவர்களுக்கு என் மனதார்ந்த பாராட்டுக்கள்!

இது என் சொந்தப் படைப்பே என்று உறுதி கூறுகிறேன்!
ம.கைலாஸ்

எழுதியவர் : ம கைலாஸ் (9-Jun-15, 11:05 am)
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே