மனித விலங்கும் விளங்காத மனிதனும்

உள் சட்டை அழுக்கு
தெரியாமல் இருக்க
வெளிச்சட்டையை
வெளுத்துவிடுகிறான்
வெண்மையாக ...

உழைப்பில் ஊறி
வெளியே வெந்ததால்
உள் சட்டை நிறத்தை
உலகம் உணர்வதே இல்லை
உண்மையாக ...
/******************************************/
சிரித்து சிரித்து
பேசினால்
சிம்மாசனம் ...

உழைத்து உழைத்து
செத்தால்
சிரிப்பே
சிம்ம சொப்பனம் ...
/******************************************/
ஆசை வார்த்தையில்
ஆளையே விழுங்குபவன்
ஆடம்பரங்களுக்கு அரசன்

அலைந்து அலைந்து
அவனுக்கு உழைப்பவன்
ஆயுள் வரை அடிமை ...
/******************************************/
நாவில் நடிக்கும்
நச்சு பாம்புகள்
கடித்தவன்
சாவுக்கு சென்று
சாதனை என்றது ...

நச்சில்ல மண்புழுக்கள்
நச்சு பாம்பை
நல்லவன் என்றது
/******************************************/
தெரிந்தது அவனுக்கு
வாயில் வடை சுட்டால்
வசதி வரும் என ...

தெரியவில்லை இவனுக்கு
வசதிக்காக வடை சுட்டால்
வியர்வைதான் வரும் என ...

/******************************************/
அவன் வேலையை
அடுத்தவனுக்கு சொல்லி
அவனையே தின்னும்
பிணந்தின்னி கழுகு ...

தின்ன சோறு
இல்லாமல்
உருகியே
சாகும் மெழுகு ...

/******************************************/
அஞ்சு மாடி
பத்தலன்னு
அடுத்த மாடிக்கு
இடம் பார்ப்பான்

தூங்கவே நேரமில்லாமல்
கிடைக்கும் நேரத்துல தூங்க
தெருவோரம் தேடுவான்
/******************************************/
மழை வெயில் பார்க்காமல்
அக்கறையாக நடித்து
வக்கணையாக அவன்
வேலையை முடித்துக்கொள்வான்

நடிப்பை நம்பி
விசுவாசம் காட்ட
அவன் செருப்பாய்
மாறி -தேய்ந்தே
செத்துபோவான் ...

எழுதியவர் : =விகடகவி= (10-Jun-15, 7:07 pm)
பார்வை : 57

மேலே