தூரத்து அடையாளங்களோடு

கைநாட்டுக் கவிதைகள் 



     தூரத்து அடையாளங்களோடு..



இருநூத்தம்பது இருந்த பிலிப்ஸ் போய்
2000ரூவாய்க்கு மேல எடுத்துக் கொடுத்து சோனி ரேடியோபெட்டி
வாங்கியாந்தேன்.

சுட்சின் காதைத் திருகினா
ஆல் இந்தியா
ரேடியோ போய் எப்.எம் ரேடியோ,
சூரியன் எப்.எம் ங்குது டோய்!

பட்டணத்துக்காரங்களுக்கு
எல்லாரையும்  ஏமாத்துறதே
பொழப்பாப் போச்சு!

அவ்வப்போது
அறியாமையால்
மனதை உலக்கை குத்தலாய் குத்திக்
கொள்ளும் குமுறல்!

சிறந்தது கிராமத்து வாழ்க்கையா?
நகரத்து வாழ்க்கையா?

பட்டிமன்றத்துல
நடுப்பால ஒக்கார்றவரு
எடுத்துச் சொல்ல ஆரம்பிக்க...

அவரு சொன்னா
போதுங்களா?
நம்ம நாட்டாமை
சொல்ல வேணாமா?

இப்படி ஒரு எதிர்கேள்வி!

'அரச சபை கலைப்பு
இன்று
ஒத்தி வைக்கப்பட்டது'ன்னு
சேதி கேட்டதும்,

அடப்பாவிகளா?
அரசாங்கத்தையும்
ஒத்தி வச்சுட்டாங்களா?
இனி எப்ப திரும்புவானுங்க

இப்படி ஒரு
ஒரு நையாண்டி! கேலி

இப்படி வெகுளித்தனமான
நேர்மையை. நெஞ்சுக்குள்  
நெறச்சு வச்சிருக்கிற

இவர்களுக்கு
நாடு இட்ட பெயர்

பத்தாம் பசலி,
படிப்பறிவில்லாதவன்,
ஏதுமறியாதவன்,
பட்டிக்காட்டான்,
'கைநாட்டு'....

இப்படி 
ஏளனத்தோடு கூடிய
புனைப் பெயர்கள்
ஏராளமாய்....

ஆனால்....

அழகான மலர்களை,
சுவைமிகு கனிகளை,

வேலைபாடுகளுக்கான
விலைமிகு மரங்களை,

அள்ளித் தருவதற்கு
ஆதாரமாகும் அடி வேர்களோ
மண்ணுக்குள் மட்டுமே
மறைந்து கிடப்பதுபோல...

இந்த கைநாட்டு
மனிதர்களுக்குள்ளும்
மௌனமாய் மறைந்து கிடக்கும்
மகோன்னதங்கள் ஏராளம்!

பெத்த புள்ளையானாலும்
தோளுக்கு மிஞ்சிட்டான்ல....

செத்தவங் கூலி
சொமந்தவன் கைல!

ஒத்த பைசா பிரயோசனமில்ல
பனமர உசரம் வளர்ந்துட்ட

இப்படி ஆணாதிக்கத்தை
ஆமோதிக்கும் நடப்புகள்...

ஆயிரம் இருந்தாலும்
பொட்டப் புள்ளைய
எப்படி கைநீட்டி அடிக்கலாம்
கம்னாட்டிப்  பயலே!

இப்படி பெண்ணுரிமைக்கு
முன்னுரிமை பேசும்
வாழ்வியல் முறைகள்

வீரம் சோதிக்கும்
இளவட்டக் கல்....

கன்னியைக் கைப்பிடிக்கும்  முன்
இளங்  காளைகளோடு
வெள்ளோட்டம் பார்க்கும்
மஞ்சு விரட்டு

வெள்ளை மனம்   விளக்கும்
வெள்ளை வேட்டி

இடுப்பில் அரைஞாண் கயிறு
முள்வாங்கி

வீரத்தின்
அடையாளம்
சொல்லும்
கொடுவாள்
தமிழ் மீசை

சிங்கத்தின்
பிடரிபோல
நீண்டு வளர்ந்த
மயிர் கற்றைகள்

பின் இடுப்பில்
கொசுவம் வைத்த  
கண்டாங்கிச்  சேலை

காதுகளைக்
கட்டி இழுக்கும்
தண்டட்டி ஓலை

பொட்டப்புள்ள
வருது டோய்

எனமுன்  எச்சரிக்கை
ஒலி எழுப்பும்
கால்  சலங்கை  அணிந்த 
கொலுசுகள்

பூச்சூடிய கூந்தல்

மருதாணியில் கட்டுண்ட
விரல்கள்

இன்னும் இன்னுமாய்....

தொலைந்துபோன
தமிழனின்
தூரத்து அடையாளங்களை,
இன்றும் சுமந்து கொண்டு.....

கட்டை விரலில்
கட்டை வண்டி
மசியை அப்பி
மானசீகமாய்
தன் பெயரை
பதிக்கும் இந்த 
கைநாட்டு
மனிதர்களுக்குள் 
வேரூன்றி நிற்கும்


நேர்மை,
நேசம்,
மரபுகள்....
அவர்களை என்றும்
குலைத்து விடாது

விளைந்து கிடக்கும்
கலாச்சாரம், பண்பாடு
வாழ்வியல் நம்பிக்கைகள்

அவர்களோடு வாழ்ந்து
உணர்ந்த அனுபவம்
என்ற முறையிலும்.....

வாழ்க்கை 
அவர்களுடையது

வார்த்தைகள்
தமிழுக்கானது

நம்மைக் கடந்தவர்களை
நம்மைக் கவர்ந்தவர்களை
நாம் நேசிப்போம் நண்பர்களே!






  

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (12-Jun-15, 12:56 pm)
பார்வை : 116

மேலே