கண்ணோட்டம்

நல்ல ஒரு காலை வேலையில்
மனைவி ஏதோ முனகினாள்.

நானோ மடித்திரிந்த நாளிதழை,
விரித்து செய்திகளை நோட்டமிட்டேன்.

ஏங்க?
எத்தனை முறை தொண்டதண்ணி
வத்தக் கத்தினாலும் காதுல
விழாதே? என்றாள்.

பக்கத்துக் கடையில்
டீத் தூளும்,
சின்ன தேன் பாட்டிலும்
வேணுமாம்.

மழுங்க மழுங்க பார்த்தபடி,
அலைபேசியை அலைமாரியில் வைத்துவிட்டு,
அடுக்கக தரைத்தளம் அடைந்தேன்.

ஏதோ இனம் புரியாத
சந்தோசமொன்று என்னை
இச்சிக்க செய்தது.

புன்னகை பூத்தபடி
நகரத் தொடங்கினேன்.

ரோசாப்புபூவு, ரோசாப்பு,
ரோசாப்புபூவு, ரோசாப்பு என்று
கூவுகிறாள் ஒருத்தி.

கேட்டைத் தாண்டி,
தெருவில் நிற்கிறேன்
பூக்காரி தென்படவில்லை!
பரவி இருத்த பூவாசம் புல்லரித்தது.

பூவாசம் நுகர்ந்தபடி
மெய்மறந்து அடிமேல் அடிவைத்து
நடக்கிறேன்.

"கிரிச்!" "பிளாச்!" என்று
காலடியிலிருந்து ஒரு சத்தம்.

குனிந்து பார்கிறேன்,
தண்ணீர் பீச்சியடித்த
ஒரு சப்பட்டையான ரோசாப்பு!

ரத்தச் சிகப்பு நிறத்தில் ரோசாப்பு.
காம்பை பிடித்தெடுத்து,
அருகில் பார்த்தால்,
கொள்ளை அழகு.

சப்பலான பூ,
இப்போது லேசாக விரியத் தொடங்குகிறது,
மெல்ல மெல்ல அசைகிறது,
விரிந்து, விரிந்து அதன்
பழைய ரூபம் பெறுகிறது.

இதழ்கள் ஒன்றன் பின் ஒன்றாக,
இடமும் வலமும் தன்னைத் தானே,
அடுக்கிக் கொள்கிறது.

இறைவனை நேரில் கண்டதுபோல்,
ஒரு பேரானந்தம்,
பூரிப்பு! உற்சாகம்!
அந்த தெய்வீக தன்மையில்
திளைத்துக் கொண்டிருந்தபோது,

"லொள்! லொள்!! லொள்!!!" என்று ஒரு நாய்,
என் இடது காலருகில்.

என் கையில் தின்பண்டம்
ஏதுமில்லை என்று செய்கை செய்தபடி,
ரோசாப்புவை நாயின் முகத்தில்
நீட்டி நீட்டி காட்டுகிறேன்.

என்னா சார்!
தெரு நாய்மேல,
நாய் காதலா? என்றாள்
அண்டை வீட்டு அக்கா.

"பம்பம்பம்!" "பம்பம்பம்!!" என்று
ஒரு அகோர தண்ணி லாரி.

தெரிதுக்கொண்டு ஓடியது,
என் புது காதலி.

புழுதி கிளப்பிய லாரி
கண்ணில் மண்ணைத் தூவி,
என் கையிலிருந்த ரோசாப்புவை
தூக்கி எறிந்தது.

கையில் ரோஜா காம்பும்,
சிவந்த கண்களோடு,
கண்களைத் தேய்த்தபடி,
வீசி எறியப்பட்ட ரோஜா
இதழ்களைத் தேடலானேன்.

அங்கொன்றும்,
இங்கொன்றுமாய் கிடந்தது.

இதை எடுப்பதா?
அதை எடுப்பதா? என்று
தடுமாறுகையில்....

சார் ஐநூறா?
ஆயிரம் ரூவாவா?
காணமென்று அவனுக்குள்
பேசியபடி தேடுகிறான் ஒருவன்.

கண்டிப்பா தங்க மோதிரம்
தானென்று தவிக்கிறான் மற்றொருவன்.

இருக்க வாய்பில்லை,
தங்கச் சங்கிலி தானென்று,
உறுதியாய் நிலத்தை
உழத் துடங்கினான் மூன்றாமவன்.

பெண்மணி ஒருத்தி
வீட்டு சாவியா?
வெசனப் படவேண்டாம்,
கிடைத்து விடும் என்று
அறுதல் கூறினாள்.

நிலைமையை புரியவைக்க
மனமின்றி வெறுத்துபோய்,
சேகரித்த இதழ்களை
கீழே தவற விட்டேன்.

ஓரிரு இதழ்கள்,
என் கார்டன் சட்டையிலும்,
மற்றும் சில கைலியிலும,
மீதமனைத்தும் காலடியிலும் விழுந்தது.

இதை தூரத்திலிருந்து பார்த்த,
என் வீட்டு வேலைக்கார அக்கா..

அம்மா! அம்மா!! அம்மா!!!
அய்யா தெருமுனையில
கையறு பட்டு,
ரத்தம் சொட்ட சொட்ட நிற்கிறார்.
ஊர் சனமே சுத்தி நிற்கிறது,
என்று அலறினாள்.

டீத் தூளுக்கும்,
தேனுக்கும் காத்திருந்து, காத்திருந்து,
நொந்துகிடந்த என் பத்தினி,
பாய்ந்தோடி வந்தாள்.

என்கொன்று மில்லை என்று
புரிந்து கொண்டவள்,
என்னைத் தர தர வென்று,
இழுக்காமல் இழுத்தபடி
வீடு புகுந்தாள்.

என்ன நடந்தது?
அழகான,
வாசமான ரோஜா ஒன்றை
தெருவில் கண்டெடுத்தேன்.

யாருடைய பூவது ?
பூக்காரி வைத்திருந்த பூவது!

சரி நேற்று நான் என்ன பூ வைத்திருந்தேன்?
மல்லிகை தானே?

த்தூ! த்தூ!!
துளசி என்று தரையைப்
பார்த்து துப்பினாள்.

என் தலையிலிருக்கும்
பூ உனக்கு அழகாக தெரியாது,
ஆனால் பூக்காரி தலையில்
உள்ள பூ மட்டும்.......!

தவறாக எடுத்துக் கொண்டாய் என்று,
படபடப்பில் விவரிக்கிறேன்.......

மெதுவாக தரைத்தளம் அடைந்து,
பூக்காரி சத்தம் கேட்டு,
வாசத்தில் மெய்மறந்து,
அவசரத்தில் என் கால் பட்டு,
மோதி விட்டு,
சப்பென,
இதழ்கள் ஒன்றோடு ஒட்டி,
இதழ்களிருந்து தண்ணீர் பீச்சியடித்து,
பிறகு தானாகவே இதழ்கள் பிரிந்தது.

நாயொன்றும் என்னோடு உரசல் வேறு.
அண்டை வீட்டு அக்கா,
என்ன சார்? தெருவோரக்
காதாலா என்று களாய்த்தாள்
என்று முடிப்பதற்குள்.....

அலைபேசியை அழுத்தியபடி,
அப்பா! அப்பா!! அப்பா!!!
நான் மோசம் போயிட்டேனென்று
அலறிக் கொண்டே ஓடலானாள்................................!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (13-Jun-15, 1:55 pm)
Tanglish : kannottam
பார்வை : 206

மேலே