வேரோடு வேறிடம் - வினோதன்

ஆராய்ச்சி காதல்
கைநீட்டி அழைக்க
பிச்சி பீராய்ஞ்சி
கடனேனு பறந்தேன்
கடனோடும் தான் !

பணமென்னும் கழுகு
என் வேரோடு பிடிங்கி
வேறிடம் தூவியது,
கடல் தாண்டி விழுந்து
கண்ட இடம் சீனதேசம் !

கண்ணீர் குடுவைக்கு
கட்டாய மதகிட்டு
நெகிழிப் புன்னகையோடு
நகர்ந்த என்னை - கை நீட்டி
அழைத்து - தன்னகம்
பதுக்கியது ஓர் எந்திரப்பறவை !

மூன்று பறவைகள் - மாறிமாறி
மாரி தூவும் மேகங்கள்
தீண்டித் தாண்டி - என் இடம்
தேடி - வீசிச் சென்றன,
விழுந்த இடம் விரும்பிய இடமும் !

உடல் மொழி கொண்டு கூட
கணிக்க முடியா மொழியது !
சிதறிய நாணயமொன்றின்
பக்கவாட்டு வாத்தியமென
புரிதலுக்கு அப்பாற்பட்டது !

ஆராய்ச்சி குழுவினர்
அன்பு மழை பொழிய,
வந்த களைப்போ பசியோ
அறியாத உடல் - என்
அறை சென்றதும் - விழி
மூடிக்கொண்டது உடல் !

கண்ணை கடிக்கும்
மின்சார விளக்குகள்
வியாபித்த தெருக்களை
வேடிக்கை பார்ப்பதை
தினசரி வடிக்கையாக்கி
வாழ ஆரம்பிக்கிறேன் !

அட்டைப் படங்களை
கிரகித்து - யூகித்து
பொருட்கள் வாங்குகிறேன்,
காற்றில் படம் போட்டும்
கூகிளாண்டவர் உதவியுடனும்
வாழ்க்கை எளிதாகிறது !

சாப்பிட்டு மட்டுமே
பழக்க பட்டவனுக்கு
சமையல் சாபம் தானே ?
சாபம் வாங்கி வரத்தின்
வண்ணம் தீட்டி வருகிறேன் !

வழக்கமாகிவிட்ட
வாழ்க்கையில் - ஒரு சீனத்து
இளைஞசனின் பேச்சு,
இனம் புரியா உற்சாகத்தை
மனதுள் விதைத்துவிட்டது !

"நீங்கள் இந்தியனா ?
நீங்கள் தமிழனா ??
தொன்மையான மொழியாம்
தமிழை கற்றுத்தர முடியுமா ?"
எனக் கேட்டபோது - உலகின்
உச்சாணிக் கொம்பில்
நின்றதாய் ஓருணர்வு !

ஆராய்ச்சி பணிகளை
செவ்வனே செய்து - இரு
வருடங்களில் - ஒரு
தமிழனனின் வீரியம்
காட்டிவிட்டு விடைபெற,
பணிகளில் பயணிக்கிறேன் !

(சீன தேசத்தின் ஷாண்டாங் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி பணியில் சேர்ந்துவிட்டேன் என்பதை நண்பர்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்)

எழுதியவர் : வினோதன் (13-Jun-15, 7:38 pm)
பார்வை : 69

மேலே