தேடு
தேடு
=================================================ருத்ரா
"நாட்களை எண்ணுவதன் அடையாளமே
ஜபமணிகளை உருட்டுவது!
இன்பமும் துன்பமும் மாறி மாறி
வருவதை விரல் தொட்டுப்பார்.
கவலைகளை
லாப நட்டக்கணக்காக்கி
அமைதி கொள்.
கண்ணீர்த்துளிகளையும்
பங்கு மூலதனமாக்கி
பகடை விளையாடு.
சந்தோஷங்களையும் மகிழ்ச்சியையும்
உன் கையில் விழும் மலர்களாக
நீ கருதுவாயானால்
இந்த வானமே அடுத்த விநாடி
உனக்கு பொன்னாடை போர்த்தும்.
நம்பிக்கை..
நம் பூமி உருண்டையின்
கற்பனையான
அச்சுக்கோடு ஆகும்.
நீ நிலையாக நிற்கிறாய்.
ஆனாலும் சுழன்று கொண்டிருக்கிறாய்.
அதுவே நம்பிக்கை.
ஆயிரம் கோடிக்குப்பிறகு
ஆயிரத்தொன்றாவது கோடி வரவில்லையே
என்று
உனக்கு நெற்றிச்சுருக்கங்கள் எத்தனை பார்?
மத்தியானம்
கோவிலின் உருண்டை சாதம் கிடைத்தது.
இரவுக்கு
வயிற்றுப்பசியால்
வயிற்றில் சுருக்கம் விழுவதைப்பற்றி
அந்த பிச்சைக்காரனுக்கு கவலை.
நெஞ்சுக்கூடு துருத்த
பார வண்டி இழுப்பவனின்
வியர்வையால்
அந்த தெரு முழுவதற்கும்
கும்பாபிஷேகம் தான்.
ஆனால் அவனுக்கு
கூலியோடு
இந்த உலகின் துருவமுனை
முடிந்து நிற்கிறது...
நாம் எதற்கு பிறந்தோம்.
ஏன் சாகிறோம்.
இதயமும் மூளையும் கல்லீரலும்
நுரையீரலும்
நமக்கு "பாஷ்யம்" எழுதுகின்றன.
நமக்கு "புரிவதற்காக"
அவை எழுதப்படவில்லை.
இன்னும்
எழுத்து தொடர்கிறது.
அதன் "தலை எழுத்தை தேடி"
அந்த எழுத்தும் தொடர்கிறதோ..."
போதுமடா சாமி..
யாரோ எவனோ டைரியில்
கிறுக்கியதையா
இத்தனை நேரம் படித்தேன்.
அந்த பொட்டலக்காகிதத்தைப் போட்டு விட்டு
என் தேங்கா..மாங்கா பட்டாணி
சுண்டலைத் தேடினேன்.
மெரீனா மணலில்
அது சிதறிக்கிடந்தது.
==============================================