பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு - அவள் அப்படித்தான்
காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பதை உணர்ந்து கொண்டேன் . என் அபிமான படைப்பாளிகளுள் ஒருவரான பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளை திறனாய்வு செய்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன் . நிறைய நாள்கள் இருக்கின்றனவே நாளை பார்த்துக் கொள்ளலாம் , நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றே நாட்களை நகர்த்தி விட்டேன் . இன்று கடைசி நாளில் ஒன்றாவது சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன் .
பொள்ளாச்சி அபி அவர்களின் பரிசு பெற்ற சிறுகதையான " அவள் அப்படித்தான் " என்ற சிறுகதை என் மனதைத் தொட்ட சிறுகதையாகும் . ஒரு சிறுகதையை சிறப்பாக காட்சிப் படுத்தும் சாதுர்யம் பொள்ளாச்சி அபிக்கு கை வந்த கலையாகும் . சாமான்ய மக்களின் வாழ்வியல் அவலங்களை அலசி தீர்வு காண்பதில் அவருக்கு நிகர் அவரே . அடித்தட்டு மக்களின் அபிலாசைகளையும் , ஏக்கங்களையும் படம் பிடித்துக் காட்டுவதில் கைதேர்ந்தவர் .
பொழுது போக்காக மட்டுமில்லாமல் சமூக அக்கறை , சமூக விழிப்புணர்வூட்டுவதாக அமைந்திருக்கும் . " அவள் அப்படித்தான் " என்ற இக்கதையும் இதற்கு விதிவிலக்கல்ல .
“ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...?” //
இந்த முதல் வரியைப் படித்ததுமே காமாட்சி என்ற பெண்ணின் மேல் கெட்ட எண்ணமே உண்டானது . மிகவும் கொடூரமானவள் என்றே நினைக்கத் தோன்றியது . மருத்துவமனையில் அவளைப் பாத்துவிட்டு வந்த பெண்மணிகள் ஏன் அப்படி பேசிக்கொள்ளவேண்டும் என்று மனம் பலவாறாய் கணக்குப் போட்டது .
கோபாலுவுக்கு முதன் முதலாய் ஆத்தா மனம் விட்டு பேசிய காட்சி சித்திரமாய்த் தெரிய .....
அக்காட்சி வாசிப்போர் மனத்திரையிலும் நிழற்படமாய் ஓடியது . கிடா வெட்டி , கீறி , சுத்தப்படுத்தி தோலைக்கிழித்து எடுத்து பக்குவமாய் அதை விற்பனைக்கு மாட்டி வைக்கும் லாவகத்தை வெகு அழகாய் காட்டியுள்ளார் ஆசிரியர்.
இரக்கம் மிகுந்த பெண்கள் இப்படி உயிர்களைக் கொல்வார்களா என்று கோபாலின் மனதில் ஓடிய சந்தேகத்திற்கு காமாட்சி சொன்ன விளக்கம் மனதை தைத்தது . பெற்று , வளர்த்து ஆளாக்கிய பிள்ளை மனைவி வந்தபின் பெற்றவளைப் புறக்கணித்தால் என்ன பாடுபடும் என்பதை அவள் வார்த்தைகள் பிரதி பலித்தன . " எனக்கு கொள்ளி போடக் கூட அவன் வரக்கூடாதுடா ..."
என்று ஒரு தாய் சொன்னால் அந்த உள்ளம் பட்ட வேதனையை வார்த்தைகளால் சொல்லவும் வேண்டுமோ ....? ஆனால் சமுதாயத்தில் இப்படி பட்ட பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றனர் .
யாரிடமும் கையேந்தாமல் , தன கையே தனக்குதவி என்று உழைத்து தன வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொண்டு , தன்னிடம் பரிவு காட்டிய கோபாலுவையும் ஆதரவாய் பார்த்துக் கொண்ட தாயுள்ளம் போற்றக்குரியது . ஆனால் அவனிடமும் தப்பு செய்தால் தண்டிப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறும் அவளின் இயல்பு ....யாரிடமும் கறாராய் இருக்கும் மனநிலை ...அதேசமயம் மீதியானவற்றை அக்கம் பக்கத்தார்க்கு இனாமாய் கொடுக்கும் கருணையுள்ளம் ,
வாடிக்கையாளரிடம் பேசும் சாதுர்யம் என எல்லாமே அழகாய் சுட்டியுள்ளார் கதாசிரியர் .
முதல் வாடிக்கையாளர் வந்துவிட்டார்.“பை கொண்டு வந்திருக்கீங்கல்லே.,” ஆத்தாவிடம் இறைச்சி வாங்குபவர்கள் நிச்சயம் பை கொண்டு வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.
படிக்காத பெண்மணியை இருந்தாலும் என்ன ஒரு விழிப்புணர்வு ! நெகிழிப் பை தவிர்க்க வேண்டும் என்பதில் எவ்வளவு கவனம் ...?
இறுகிய மனமுள்ளவளாய் சித்தரிக்கப்பட்டாலும் அந்தப் பாலையிலும் பாலூறும் உள்ளம் கண்டு மனம் நெகிழ்ந்தது .
“தம்பி..ஆத்தா இருக்குற வீட்டையும்,பேங்க்லே இருக்கற ரெண்டு லட்ச ரூபாயை யும் உம்பேர்லே ஆத்தா எழுதி வெச்சிருக்கு..!”
என்று சொன்னபோது அதலாம் எனக்கு எதுக்கு ? ஆபரேசனுக்கு பயன் படுத்திக்குங்க என்று சொன்ன கோபாலின் உள்ளம் விசாலமானது .
பாசத்துக்கு ஏங்கி அது கிடைக்காத பட்சத்தில் ஆதரவாய் இருந்த பிள்ளைக்கு தன சேமிப்பை எழுதி வைத்த காமாட்சியின் அன்பு புனிதமானது . அவள் உடல் உறுப்புகள் அத்தனையும் தானம் செய்ய முன்பே எழுதிக் கொடுத்த காமாட்சி மதிப்பில் உயர்ந்துவிட்டாள் .
சிலரை நாம் தவறாகப் புரிந்து வைத்திருப்போம் . ஆனால் அவர்களோ பண்பின் சிகரமாய் இருப்பார்கள் . பலா வெளியில் கரடுமுரடாய் தோன்றினாலும் உள்ளே சுளை தித்திப்பதில்லையா அதுபோல் அவள் அப்படித்தான் .... !!
கதைக்களத்தைக் கண்முன் காட்டுவதிலும் , கதை படிக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாமல்
கதா பாத்திரங்களோடு ஒன்ற வைத்துவிடும் தனித்தன்மை பொள்ளாச்சி அபிக்கு உண்டு .
சிறுகதை வானில் பூரண நிலவாய் உலா வர வாழ்த்துக்கள் !