பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு -அவரின் சொந்தங்கள்

சூரியன் மறைந்து கொண்டிருந்த நேரம்.., “இதோ அழுதுவிடுவேன்..” என்பதைப்போல,வானம் தன் முகம் கறுத்து நின்றிருந்தது. அதனை உறுதிப் படுத்துவது போல,மேற்குத்திசையிலிருந்து ஈரத்தை சுமந்து வந்துகொண்டிருந்தது காற்று. பிரதான சாலையைவிட்டு சற்றே உள்ளொடுங்கி, வாசலில் மயங்கும் வெளிச்சத்துடன் நின்றிருந்த அந்தப் பெரிய வீட்டுக்கு முன்பாக,பல வண்ணங்களில் பூத்து சிரித்துக் கொண்டிருந்த மலர்கள்,இப்போது தரையில் உதிரப் போகும் நேரத்தையெண்ணி திகிலில் உறைந்திருந்தன....

கதையின் ஆரம்பம் இறுக்கமான ஒரு சோக நிகழ்வை மிக அருமையாக சொல்ல தயாராகிறது .....அங்கே ஒரு மலர் உதிரப் போகும் இறுதிக்கணங்களை எண்ணியபடி ..... ஆம் ...பிரபல எழுத்தாளர் ஞான பாரதியின் மரணத்திற்கு முன்னான கணங்களில் அவருடைய மனத்திரையில் அணிவகுத்து செல்லும் அவருடைய படைப்புக்களில் உயிர் பெற்று உலா வந்த ஒவ்வோர் கதாபாத்திரங்களும் ஒருவர் பின் ஒருவராய் அங்கு ஞான பாரதியின் மனக் கண்களில் வந்து நிற்கின்றனர் அவரது சொந்தங்களாய் ....

அந்த அறையின் வாசலில் நிழலாடியது.கௌசி திரும்பிப் பார்த்தாள்.மஞ்சுளா உள்ளே வந்து கொண்டிருந்தாள்.ஞானபாரதி கிடந்த கட்டிலின் அருகே சென்று நின்றவளுக்கு,இளைத்துக் கருத்துக் கிடந்த அவரின் கோலம் மனதை மிகவும் துயரப் படுத்தியிருக்க வேண்டும்..,மளுக்கென்று அவள் கண்களில் நீர் திரண்டு,கன்னங்களில் வழிவது தெரிந்ததுமஞ்சுளாவின் கேள்விகளுக்கான பதில்கள், கௌசியின் மனதிற்குள்ளும் ஓடின. ‘அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாமே அவசர அவசரமாய்த்தான் நடந்தேறியுள்ளது. மணவாழ்க்கை, புகழ்,பணம்..அந்த வரிசையில் மரணமும்..?’

.
எழுத்தாளர் ஞான பாரதி எழுதத் தொடங்கியஇளமைக்கால கட்டங்களில் இவர் படைப்புக்களில் பெருமளவு வலம் வந்த அவரது கதையின் நாயகிகள் ஒருவர் பின் ஒருவராய் உள்ளே வருகின்றனர் .....இந்தஇரு பெண்களுமாகிய கௌசி மஞ்சுளா ஆகியோர் இதயங்களில் ஒலித்த அந்த ஊமையான மௌன ராகம் ஒரு காலத்தில் அவர் செவிகளில் விழுந்திருக்கக் கூடும் ....இவர்கள் இருவருமே எழுத்தாளரின் இளமைக்கால நந்தவன நாட்களில் தென்றலாக தழுவிச் சென்றதை கதாசிரிரியர் அழகாக கூறிச் செல்கிறார்....


கூடவே அவர் படைப்புக்களில் பங்கு கொண்ட சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களை உள்ள பாத்திரங்கள் ஒருவர் பின் ஒருவராய் உள்ளே வருகிறார்கள் ஊர்க்கவுண்டர் ராமசாமி,பறையடிக்கும்சின்னான் அவர்களுக்குப் பின்னே..,தம்பதிகள் சுமித்ராவும்,ஜெயபாலனும்.., சங்கரய்யா..,அரசியல்வாதி கணேசலிங்கம், பள்ளிக் கூடம் போகும் சிறுமி கல்பனா, ஆசிரியரிடம் ஓயாமல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ரவி, இன்னும்.., பாதிரியார் ஓசேப்பு,கோபக்காரன் மனோகரன், கோடங்கி சிவனான்டி, பாலியல் தொழிலாளி காமாட்சி, வாத்தியார் அப்துல்லா, என ..அவர் சொந்தங்கள் நீள்கின்றன ....

இவ்வாறான நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களைச் சிருஷ்டித்து அவர்களுக்கு உயிர் கொடுத்து பல ஆயிரம் அத்தியாங்களை எழுதிய அந்த மாபெரும் எழுத்தாளனின் மரணப் படுக்கையில் அவரைச் சுற்றி நிற்கும் சொந்தங்கள் அவரால் அவர் படைப்புக்களுக்காக உயிர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் தான் .........

இங்கு கதாசிரியர் கற்பனை வளம் பாராட்டத்தக்கது ... அபி சார் தன் அதீதக்கற்பனைத் திறமையினால் வித்தியாசமான கோணத்தில் கதையை நகர்த்தி செல்லும் விதம் மிகச்சிறப்பு .

இங்கு எழுத்தாளர் ஞானபாரதி தனக்குரிய சொந்தங்கள் என்று வரித்துக் கொண்டது அவர் படைப்புக்களுக்காக உயிர் கொடுக்கப் பட்ட கதாபாத்திரங்களே ....

அப்பாத்திரங்களின் உணர்வுகள் உண்மையானவை. மானுடப் பாத்திரங்களைப்போலவே எண்ணுபவை. .....தன் வாழ்க்கைக் காலத்தில் தனி மரமாக வாழ்ந்த ஓர் எழுத்தாளன் தன் உணர்வுகளையெல்லாம் இந்தப் பாத்திரங்களோடு உலவ விட்டு அவர்களுக்காய் வாழ்ந்த ஆன்ம திருப்தியுடன் அவன் ஆவி பிரியும் தருணத்தில் அவர்கள் எல்லாம் அவனுக்கே அழுவதை கதாசிரியர் சிறப்பாகச் சொல்லிய விதம் மெச்சாமல் இருக்கமுடியவில்லை .....

சூரியன் முழுதாக மறைந்து,கறுத்துப் போன மேற்குத் திசையிலிருந்து மழை வேகமெடுத்தது. அங்கிருந்த மலர்களும் இப்போது உதிர்ந்து விட்டன.அதுவரை அந்த அறையிலிருந்த மற்ற அனைவரும் சட்டெனக் காணாமல் போயினர்.!
இனி அவர்கள் எந்தப் பாத்திரமாக,எந்தக் கதையில் வாழ்ந்து வந்தார்களோ..அங்கேயே மீண்டும் சென்றிருக்கலாம்........

ஒரு சிறுகதையின் முடிவுமிகமுக்கியமான ஒரு கணம் அல்லது தருணம் ...............இங்கு நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் இந்த கதையின் முடிவுப் புள்ளி விருட்சம் ஒன்றில் இருந்து வீழும் ஓர் முதிர் இலை தன் பயணத்தின் ஊடே மண்ணைத் தீண்டும் இறுதிக்கணமாக அல்லது ஓர் ஓவியன் தூரிகையால் இழுக்கும் கோட்டின் கடைசிப்புள்ளியாக அமைந்து அப்புள்ளி கிட்டத்தட்ட ஒரு ரகசியக்கதவாகச் செயல்படுகிறது...
ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்தைநோக்கி தாவவைத்துவிடுகிறது. இப்படி தளமாற்றங்களுக்கு வாய்ப்புகள் கூடுதலாக இருக்கிற சிறுகதைகள் எல்லோரையும் எப்போதும் கவர்கின்றன என்பதில் ஐயம் இல்லை..இந்த வகையில் அபி அவர்களின் இந்த அவரின் சொந்தங்கள் வாசகர்கள் அனைவர் மனங்களிலும் மாறாத இடத்தைப் பிடிக்கும் என்பது தெளிவு ....


இத்திறனாய்வு என்னால் எழுதப்பட்டது என உறுதியளிக்கிறேன் ..

எழுதியவர் : சிவநாதன் (16-Jun-15, 1:08 am)
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே