இராணுவ வீரனின் வாழ்கை - உதயா
உலகமே இயங்க நிலம் , நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்கள் மூலப் பொருளாக திகழ்கிறது.
ஆனால் ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும், நிம்மதியாய் இன்பத்துடன் தன் வாழ்வை இயக்க இராணுவம் எனும் காவல் படையே உயிராக உள்ளது.
ஒவ்வொரு இராணுவ வீரனின் ஏக்கம், தவிப்பு,துடிப்பு என அவர்களின் விலைமதிப்பில்ல தியாகத்தையும், எண்ணத்தினை இக்கட்டுரையில் காண்போம்.
வருடம் முழுவதும் ஏக்கத்தையும் பாசத்தையும் சுமந்த மனதினில் சிறகுகள் எண்ணில் அடங்காதவையாய் துளிர் விட தொடங்கின அந்த விடுமுறை நாட்களை செவி அறிந்தவுடனே. அவன் பயணத்தின் முழுவது அவனுக்குள்ளே நினைவு குதிரைகளும், கற்பனை குதிரைகளும் கால்களில்
குருதி வடியும் வரை அந்த காற்றின் அடுக்குகளில் ஓட தொடங்கின.
நாட்கள் பல கடந்த பின்னே தன் உறவுகளை காண துடிக்கும் மனது, அவர்களுக்கான உடைகளையும், அணிகலன்களையும் பல கடைவீதிகளை ஏறி இறங்கி வாங்கும் போது அவன் மனதின் பாசக் கடலில் கடவுளும் கண்ணீரை சிந்துவான்.
அப்பா. அம்மா, என பெற்றவர்களும், அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, என உடன் பிறப்புகளும், தாத்தா, பாட்டி என முதியவர்களும், மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி என் உறவுகளும், தன்னை நம்பி தன்னுடன் வாழ்கை பயணம் தொடர வந்த அனைத்து உறவுகளும் ஒருங்கே அமைந்த உருவத்தில் மனைவியும், குட்டிப் போட்ட பூனையின் கால்களை கடன்வாங்கி, வழியிலே விழியினை பசை போட்டு ஒட்டிவிட்டு காத்திருந்தனர்.
அவன் உறவுகளை அவனும், அவன் உறவுகள் அவனையும் காணும் நேரத்தில் ஏக்கம், தவிப்பு, என எல்லாம் மறைந்து இதுவரை காணாத ஒரு புதுமை தென்றல் அவர்களை நோக்கி வீசும், அந்த தென்றல் இறைவனின் ஆனந்த கண்ணீரில்/இறைவனின் ஏக்க கண்ணீரில் இருந்து பிறந்து இறக்கும்.
அந்த ஒருமாத காலத்திற்கு பகல் கரைந்தாலும், இரவு கரைந்தாலும், சூரியனின் தாக்கம் உயர்ந்தாலும், மழையின் தாக்கம் உச்சத்தை அடைந்தாலும் எதுவும் மதிக்கும், மனதிற்கும் எட்டாது.
ஆயுதம் உறையும் பனியிலும், குடிசை தானாக எரியும் வெயிலிலும், கற்களும் பறக்கும் புயலிலும், மலைகளும் அறுபடும் மழையிலும் தன் நாட்டிற்கு காவலாய் இருந்தவன் அந்த பாச மெத்தையில் ஒரு மாதம் மட்டும் இளைப்பாருகிறான்.
விடுப்பு முடிந்ததும் கடமை அழைக்கிறது. உறவுகளின் கண்களும் காட்டருவிக்கு இடம்பெயருகிறது.
மீண்டும் சந்திப்போமோ? இல்லை இதுதான் கடைசி சந்திப்பா ? என்ற குழப்பத்துடம் பயத்துடன் ஏக்கத்துடன் உறவுகள் அவனுக்கும், அவன் உறவுகளுக்கு கை அசைத்து உத்தரவு கொடுக்க, அவன் உறவுகளுடன் இணைந்தே தன் மனைவியின் கருவறையில் இருந்து கையசைத்த தன் குழந்தைக்கு
தன் இதயத்தின் அன்பை இதழிற்கு இடம் பெயர்த்து முத்தமிட்டான்.
மனதில் முளைத்த எண்ணில் அடங்க சிறகுகள் ஒடிந்து போகிறது. எப்போதும் தென்றலோடு இணைந்த சாரலாய் வீசும் உறவுகளின் பாசம், புயலாக மாறுகிறது, அவன் பிரிவை தாங்க மறுக்கிறது. இப்படியேதான் தொடர்கிறது ஒவ்வொரு இராணுவவீரனின் வாழ்கையும்.