உயிர் கொண்ட வேதியியல் - வேதியியலின் விந்தைகள் கவிதைப் போட்டி

முக்கால் பாகப் புரதமோடு
மூன்றுவீசக் கொழுப்பும் சேர்த்து
கால்சியக் கம்பிசுற்றி
கடைந்து வடித்த சிலையாய் நீயும் .....
காந்தவிழி உருட்டிச் சிமிட்டி
காதலென்று சொல்லிப் போக..
என்னவோ நிகழ்கிறதென
இதயம் என்பது எகிறித் துடிக்க
அட்ரீனலின் நாளம் பாய ..அது
சுருக்கிய பாதை என்பேன்.....
உன்விரல் தொட்டால் செல் எரியும்
ஆக்சிஜனேற்றம் நிகழ்ந்திருக்க
அதைத் தொடர்ந்தே வியர்த்துவிடும்
உன் இதழ் தொட்ட
ஹைட்ரஜனேற்றங்களுக்கு.......
இப்படியாய் வினையூக்க ...
என்னுள் பரவிய என்டோர்பின்
இறுக்கப் பணித்தது.....
உன்னுள் சுரந்த வாசோபிரஸ்ஸின்
நெகிழ்ந்து கிளர்ந்தது.....
கிளர்ந்தவைகளின் வீழ்ச்சிக்குப் பிறகான
இளகிய திசுக்களினுள்
என் மரபும் உன் மரபும்
சுயம்கண்டு சுகப்பட்டிருக்க....
இளஞ்சிவப்பாய்
கொனாடொட்ராபின் சொன்னது
உனக்குள்ளிருக்கும் நமக்கானதை...