உரைத்தேன் உணர்வுகளை உரக்கவே

மொட்டை மாடியில் ​உலவினேன்
சட்டையின்றி சிறிதுநேரம் நானும் !
வட்டமிட்ட பருந்துகள்பல வானிலே
நோட்டமிட்டன இரையாய் எனையே !

வட்டமிடும் பறவைகளிடம் கேட்டேன்
கொட்டமிடும் கோமான்கள் பலரிருக்க
வாட்டமுடன் நிற்கும் என்மீதுஏனோ
நாட்டமும் உங்களுக்கு நவின்றிடுவீர் !

ஆட்டம் பாட்டமென நாட்டில்இன்று
சட்டம் ஒழுங்கிலா சமூகமேஇன்று
வெட்டவெளிக் கொலைகள் இன்று
கட்டவிழ்த்த அராஜகம் அதிகமின்று !

கவலை கொள்வாரும் எவருமில்லை
கண்டும் கேட்பாரும் யாருமில்லை !
நிலைமை இவ்வாறின் நீயோ நாளும்
சமுதாயக் கவிதைகளே எழுதுவதேன் !

அக்கறை அதிகமேன் உனக்குமட்டும்
அதிமேதாவி என்றுதான் நினைப்போ !
அர்த்தமுடன் ஆத்திரமாய் கேட்டது
அதிவிரைவாய் பதில் சொல்லென்றது !

உரைத்தேன் உணர்வுகளை உரக்கவே
உணர்ந்தால் பருந்தும் பறந்திடுமென்று !
சமுதாயம் என்பதுநாம் சார்ந்ததுதானே
சாதிசமயங்கள் கலந்திட்ட மக்கள்தானே !

இனமொழி நிறைந்திட்ட உலகத்தில்தானே
இன்றைய தேவை சமத்துவ சமூகம்தானே !
வன்முறை வெறிச்செயல்கள் கூடுதுதானே
வாழ்விற்குத் தேவை அமைதி பாதைதானே !

அரசியல் அநாகரிகமும் அகிலத்தில்தானே
அநீதியற்ற பரிபாலணமும் தேவைதானே !
நித்தமும் பரவுகிறது பயங்கரவாதம்தானே
நிம்மதி நிலைத்தவாழ்வும் தேவைதானே !

நிலைமறந்த எவருக்கும் நினைவூட்டுவது
கடமையென நினைப்பதுநான் நியதிதானே !
எழுகின்ற எண்ணங்களை கவிதைவடிவில்
எழுதுகின்ற என்வழிமுறையும் தவறல்லவே !

சுட்டிக்காட்டியவை சுட்டதால் பருந்தாரும்
தட்டியெழுப்பிய உணர்வால் பறந்திட்டார் !
பட்டதைக்கூறிட பருந்தும் தேவைப்பட்டது
பதிலாகவும் பலருமறிந்திட எழுதப்பட்டது !

படித்திட்ட ஒருவர் கேள்வியெழுப்பினார்
பருந்தும் பேசியது உண்மைதானா என்று !
பக்தனிடம் பரமன் பேசுவான் என்றெனில்
பகுத்தறியும் பாமரனிடம் எதுவும் பேசிடும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Jun-15, 12:47 pm)
பார்வை : 521

மேலே