எத்தனை ரசனைகள் நீரின்மீது
நிறமில்லா
ஆற்றை சாயம் கலந்து
ஓவியமாக்குவதும்
மழைநீர்த்தொட்டியை குப்பைத்தொட்டியாக்கும்
கலைநயமும்
குடிநீர் மிதிநீராகி
தெருவில் செல்வதை
கண்டு ரசிப்பதும்
கிணற்றை
மண்ணால்மூடி
அதில் வீடுகட்டி
விளையாடும்
குழந்தைத்தனமும்..
செல்லப்பிராணிகளுக்கு
குடிநீர் குளத்தில்
நீச்சல்
கற்றுக்கொடுப்பதும்
எல்லா நதியும்
கடலைச்சேரும்
எனும் விதியை
மதியால்
எல்லா கழிவும்
கடலைச்சேரும்
என மாற்றுவதும்
ஊசிவைத்து
பூமி எனும்
தண்ணீர் பலூனை
குத்தி
மகிழ்வதும்.
இறுதியில்
விவசாயத்திற்கு
தண்ணீர் வேண்டுமா..?
என சிந்திக்கும் அளவிற்கு..
எத்தனை
ரசனைகள்
நீரின்மீது
மனிதனுக்கு..!