கை நழுவும் அடையாளங்கள்
மெல்ல மெல்ல
கை நழுவிப் போனது
என் அடையாளங்கள்.
எல்லாம் சரியாய் இருப்பதான
என் நினைவுகளின் கீழே...
தூசி படிந்து போன
எனது அடையாளங்கள்
உதிர்ந்து கொண்டிருக்கிறது
சருகுகளாக.
சருகுகளின் இடைவெளியில்...
என் உதிர்ந்த அடையாளங்களைக்
குப்பையாகச் சேகரித்துக் கொண்டிருக்கிறது
எனது நிழல்.
தொடரக் காத்திருக்கும்
பெரு மௌனத்தை எண்ணி
அஞ்சிப் பதுங்குகிறது வாழ்வு.
கசங்கிய வாசனைகள் மட்டுமே
எஞ்சி நிற்கும்
எந்த அடையாளமுமற்ற
இரக்கத்தினாலான ஒரு வாழ்விற்கு...
உங்களின் அகராதியில்
என்ன அர்த்தம் இருக்க முடியும்?