நினைவு ஆணிகள்
'நெஞ்செல்லாம் கனத்துக் கெடக்கு
கவலைப் படாதீங்க அத்தை
கொஞ்சம் பால் எடுத்து வரேன்..
வாயில ஊத்திடுங்க"
விளைச்சல் முற்றி
அறுவடைக்கு சாய்ந்து நிற்கும்
கதிர்களாக
அமைதியுடன் கணவனின் முகம்..
கருமையும் நோயும்
கலந்து பூசியிருந்த
முகம் கொண்ட
அவரது இறுதி நாளில்
பங்கஜம் அவரை வெறித்துப்
பார்த்திருந்தாள்..!
நெஞ்சுக் குழி ஒரு முறை
ஏறி இறங்கியதும்..
விழியோர நீர்த்துளி
முட்டி வந்து நிற்பதும்..
பெருமண வாழ்வின் முடிவுரைக்கு
முத்தாய்ப்பு தரும் நேரம் ..
பரவச ஒளி ஒன்று மின்னலாய் வந்து
கடலலை கரைத்த மணல் திட்டாய்
கரைந்து போக
"என்னங்க"
என்றவளை
தலை தொட்டு வருடிய கைகளை
தொட்டதும் சில்லென
ஆகிப்போன
உணர்வு ..
என்ன சொல்ல வந்தார்..
ஏன் சொல்லாமல் போனார்..
இன்று வரை
உன்னிடத்தில் மறைத்த சேதி ஒன்று..
சொல்லட்டுமா..
என்று சொன்னவர்..
என்ன சொல்ல வந்தார்..?
கேள்விப் பூரான்கள்
நெளிந்து நெளிந்து
மூளையின் செல்களுக்கு நடுவில்
இங்குமங்குமாய் ஓடிக் கொண்டிருக்க..
"ஆக வேண்டியதைப் பாருங்கப்பா.."
யாரோ குரல் கொடுக்க..
பங்கஜம்..
வெறித்தபடி பார்த்திருந்தாள்..
ஒய்வு பெற்ற காற்றின் சிறகாக..
அவர் காலடியில்
விடை தேடி ..
சுருண்டு கிடக்கும் நத்தையாய்!
நினைவு ஆணிகளைப் பிடுங்க
அவர் முயற்ச்சிக்காமலே..
இருந்திருக்கலாம்..
இன்னும் சில காலம் ..
இவளோடு!
இவளும் இருந்திருப்பாள்
உயிரோடு!

