நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று - வெண்பாக்கள்

திரு.தா.ஜோசப் ஜூலியஸ் அவர்களின் ’நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று’ என்ற போட்டிக் கவிதையை,

1 – 4 பாடல்கள் பல விகற்ப இன்னிசை வெண்பாக்களாகவும்,
5, 6 பாடல்களை ஒரு விகற்ப இன்னிசை வெண்பாக்களாகவும்,
இறுதி இரண்டடியை இரு விகற்பக் குறள் வெண்பாவாகவும்
செய்திருக்கிறேன்.

பல விகற்ப இன்னிசை வெண்பாக்கள்

வெள்ளிநா டாவாக நாடெங்கு மேவிரியும்
தண்நிலாஒ ளிச்சாலை தன்னில் உனையென்றும்
அள்ளி அணைத்திடவே நானங்குப் பாயவும்
துள்ளித்தப் பிச்செல்வாய் நீ! 1

பின்னையொரு நாளிலே பாரடங்கி ஊரடங்கி
நன்கு(உ)றைந்து விட்டதொரு ஊமையிரு ளில்,நீ
சிறைப்பிடி என்னையென் றேநெருங்கி வந்து
சிருங்காரம் செய்துசென் றாய்! 2

பெருங்காட்டில் தன்னந் தனியே தெரியும்
இலையுதிர் நீள்மரமாய் நிற்க, முகந்தொட்டு
’என்இதயம் உன்னிடமே விட்டுவிட்டு நானின்று
செல்கின்றேன்’ என்றுமறைந் தாய்! 3

பதமான அச்சொல்லை நா(ன்)இதமாய் நம்பியே
நித்தமும் காத்திருந்தேன் நானும்; கடந்தபல
முப்பத்தி ஐந்தாண்டு கள்கழிந்தும் என்னிடம்
அப்பழுக்(கு) இல்லையென் பேன்! 4

ஒரு விகற்ப இன்னிசை வெண்பாக்கள்

எல்லாம் முடிந்துமே ஏக்கம் அழியாமல்
கல்லாய் சமைந்துவிட்டேன்; என்கண்ணே நீதானே
எல்லாம் விதியென மீதிக் கதையதை
சொல்லாமல் சென்றுவிட் டாய்! 1

சோகச் சுமைகளைத் தாங்கித் தடுமாறும்
யோகமில் வண்டிமாடாய் என்றும் அசைபோட்டு
போகுமிடம் தோன்றாமல் போனவழி தென்படாது
நோகுதென் நெஞ்சமென் பேன்! 2

இரு விகற்பக் குறள் வெண்பா

நீயும்நா னும்யாரோ இன்று நினைவிலே
வாழவும் கற்றது நன்று! 1

ஆதாரம்: திரு.தா.ஜோசப் ஜூலியஸ் அவர்களின் ’நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று’ என்ற போட்டிக் கவிதை.

திரு.தா.ஜோசப் ஜூலியஸ் அவர்களுக்கு நன்றி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-15, 10:07 pm)
பார்வை : 142

மேலே