பொம்மைகளுடன் உறங்கிய அனுபவம் இல்லை உண்மை நீ உடன் இருந்ததினால் - கற்குவேல் பா
என் தந்தைக்கு
**********************
எனக்காக
நீ வடித்த
வியர்வைதனில் ;
ஆயிரம் ,
மரம் வளர்த்திருக்கலாம் ;
லட்சம் மூட்டை ,
உப்பு தயாரித்திருக்கலாம் !
கடலுக்கும் சிறிது ;
கடன் கொடுத்தாயோடா ?
* * *
உன்
உடலில்
தழும்புகள் எல்லாம் ;
கண்டிப்பாக ,
எனக்காக
கிடைத்தவையே !
* * *
பொம்மைகளுடன்
உறங்கிய
அனுபவம் இல்லை ;
உண்மை நீ
உடன் இருந்ததினால் !
* * *
உன்
மாரிலும் தோளிலும் ;
மாறி மாறி ,
உறங்கிய
நாட்களே அதிகம் !
* * *
மிதிவண்டி கேட்டு
அடம் கொண்டதில்லை .
உன் முதுகினில் ;
யானை சவாரி
செய்த நாட்களில் !
* * *
என் கண்ணில்
தூசி விழுந்தால் ;
முதலில்
கலங்குவது ,
உன் கண்களே !
* * *
பொங்கலும் ,
தீபாவளியும் ;
என்னால் உனக்கு ,
வலியே சுமையே .
நீயோ ?
ஒரு நாளும் என்னை ,
சுமையாய் எண்ணியதில்லை !
* * *
அத்தனை
துன்பத்திலும் ,
கல்வி
கொடுத்தாய் ;
உயர் கல்வி வரை ,
கொண்டு சென்றாய் !
* * *
என் முதல் சம்பளம் ,
கை சேரும் முன்னே ;
உன்னை ,
அவசரமாய் ;
அழைத்துக் கொண்டானடா ,
கடவுள் என்ற ,
கயவன் !
* * *
பத்து மாதங்கள்
சுமந்தவள் ,
தெய்வம் என்றால் ?
இத்தனை வருடம் ,
சுமந்த நீ ;
தெய்வத்திற்கும் ,
தெய்வம் அன்றோ !
* * *
அன்னையின் அன்பு ,
அறிந்ததில்லை ;
அறியவும் ,
விரும்பியதில்லை ;
தந்தை நீ ,
உடன் இருந்ததினால் !
* * *
மீண்டும் ஓர் ,
பிறவி வேண்டுமடா ;
உன்னை
தாயாக ,
என் கருவில் சுமக்க ;
தந்தையாக ,
என் தோளில் சுமக்க !
- கற்குவேல் . பா
*** மீள்பதிவு ***