தனிமையுடன் தள்ளுவேன்நா ளை – வெண்பாக்கள்
திருமதி சியாமளா ராஜசேகர் அவர்கள் படைத்த 'தனிமையுடன் நாளை தள்ளிடுவேன் அன்பே!' என்ற கவிதையை வெண்பாக்களாக செய்ய விரும்பி, 'தனிமையுடன் தள்ளுவேன்நா ளை!' என்ற தலைப்பில் அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறேன்.
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
பெண்ணுன்னைப் பார்த்து பிரமித்து நான்நின்றேன்!
கண்பார்த்துப் பூத்துவுடன் காதலிலே வீழ்ந்தேனே!
எண்ணற்றப் பாக்களை ஏக்கமுடன் யாத்துன்னை
வண்டாய்வந் தேன்வட்ட மிட்டு! 1
கனிந்திட்ட நெஞ்சம் கசந்ததுவும் ஏனோ?
அனிச்சமலர் போலே அகம்வாட லாமோ?
இனியென்றன் வாழ்வில் இடம்பெண்ணுக் கில்லை!
தனிமையுடன் தள்ளுவேன்நா ளை! 2
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
பெண்ணுன்னைப் பார்த்து பிரமித்து நான்நின்றேன்!
கண்பார்த்துப் பூத்துவுடன் காதலிலே - எண்ணியெண்ணி
எண்ணற்றப் பாக்களை ஏக்கமுடன் யாத்துன்னை
வண்டாய்வந் தேன்வட்ட மிட்டு! 1
தென்றலென நீதவழ்ந்து தேன்போல் இனித்தாயே!
பொன்னென் றுனைநினைத்தேன் புன்னகையால் - கொன்றாய்நீ!
மின்னலெனத் தான்ஒளிர்ந்தாய் மின்வெட்டாய் நீமறைந்தாய்!
என்னென்பேன் ஏமாற்றம் தான்! 2
கனிந்திட்ட நெஞ்சம் கசந்ததுவும் ஏனோ?
அனிச்சமலர் போலவே வாட – இனியாய்!
இனியென்றன் வாழ்வில் இடம்பெண்ணுக் கில்லை!
தனிமையுடன் தள்ளுவேன்நா ளை! 3