நீரஜா - சிறுகதை

ஒரு நல்ல வாழ்க்கை, ஒரு நல்ல வேலை, ஒரு நல்ல மனைவி – போதாதா? போதலையே… நீரஜாவைப் பார்த்த பின்னால் நிச்சயம் போதவே போதவில்லை! என் பேரு – அது வேண்டாம் உங்களுக்கு, இது அவ்வளவு உத்தமமான கதை இல்லை! அவ பேரு நீரஜா, அது போதும். அவளைப் பார்த்தவுடனே அடையனும்னு ஒரு மனக்கிளர்ச்சி - ஏற்கனவே ஒரு பொண்டாட்டி இருக்காங்குறதை மறந்துட்டேன்!

மஞ்சள் வெய்யிலும், லேசான தூறலும் கலந்த இரம்மியமான மாலை. நான் கோயம்பேடு மொபசில் நிலையத்திலேர்ந்து வெளி வரேன், அவளும் வந்தா, “சார், வில்லிவாக்கத்துக்கு எந்த பஸ் போகும்?”

சொன்னேன். இளஞ்சிவப்பு நிற பருத்திப் புடவை. அழகா கட்டியிருந்தா. குளிச்சு முடிச்சு வந்தவளைப் போல சுறுசுறுப்பு. “நன்றி!” வைன் கோப்பையில் மிதக்கும் திராட்சைப் பழம் மாதிரி கண்கள் (ஷேர், டிவைடண்டு, டேக்ஸ், மியூச்சுவல் பண்டு இப்படி ஏதாச்சும் கேளுங்க விலாவாரியா சொல்றேன், கவிதைலாம் இனிமேதான்!)

”நானும் வில்லிவாக்கம்தான், (பொய்யில்ல!) அட்ரெஸ் சொல்லுங்க, துல்லியமா வழிகாட்டுறேன்” தெருப்பேரைச் சொன்னா (அது எதுக்கு உங்களுக்கு?)

“அட, என் வீட்டுக்குப் பக்கத்து தெருதான்” இதுவும் பொய்யில்லை! எனக்கே இந்த ‘தற்செயல்’ ஆச்சரியமாத்தான் இருந்துச்சு…

”ஓ!” புன்னகைத்துவிட்டு நான் கை காட்டிய பேருந்தில் ஏறிப் பெண்கள் பக்கம் உட்கார்ந்தா, அவளுக்கு எதிர்ப்பக்கம் உட்கார்ந்தேன். அதுக்கு மேல எதுவும் பேசவில்லை, விடாப்பிடியா ஜன்னல் பக்கமே பார்த்துட்டு வந்தா.

“வர ஸ்டாப்பிங்தான்!” ஜன்னலைவிட்டுத் திரும்பினாள், வைன் திராட்சைகள் (வேற உவமை தெரிஞ்சா சொல்லுங்க!)

“ம்… நன்றி!”

“அதிகமா பேசமாட்டீங்களோ?” பெட்டியை வாங்கிக்கொள்ள கைநீட்டினேன், வேண்டாம் என்று புன்னகைத்தாள்.

“தெரியாதவங்க கூட!” புன்னகை இலவசம்!

“என்னைத்தான் உங்களுக்குக் கோயம்பேட்டிலேயே தெரியுமே? என் பேரு…” சொன்னேன் (அதான் உங்களுக்கு வேண்டாம்னு சொல்லிட்டேனே!)

“நீரஜா” கை குலுக்கிக்கொண்டோம் (விட மனசுவரலைதான்!)

”சென்னைக்கு என்ன விஷயமா வந்திருக்கீங்க?”

“சும்மாத்தான்!” ‘விடமாட்டீங்களே’ என்பதைப் போல பார்த்தாள்.

“ம்ம்…” எடுத்த எடுப்பிலேயே அதிகம் வழியக்கூடாது என்று முடிவுசெய்தேன், என் சுபாவமும் அதில்லை, அமைதியாகவே நடந்தோம். “இரண்டாவது ரைட் நீங்க சொன்ன தெரு, முதல் ரைட் என்னோடது!” என்றுவிட்டு ’எப்படியோ போ’ என்பதைப் போல நடக்கத்தொடங்கினேன்,

“நன்றி… நான் உங்கள ஏதாவது…”

“அதெல்லாம் ஒன்னுமில்ல, நாந்தான் கொஞ்சம் எஸ்ட்ராவா ஆர்வம் காட்டிட்டேன், ஐ ஷுட் பி சாரி” சுத்தமான வியாபாரப் புன்னகைத்தேன் ”பட், ஐம் நாட்” சின்ன மிலிட்டரி சல்யூட்டுடன் முன் நடந்தேன் (மீசைல மண் ஒட்டலைல!)

அடுத்த நாள் மாலை நீரஜாவை என் வீட்டுக் கூடத்தில் சந்தித்தேன் என்றால் என் (இன்ப)அதிர்ச்சியை உங்களால் புரிந்துகொள்ள முடியும்தானே? அவள் வந்திருப்பது அவளது அக்காவின் வீட்டிற்கு, அவளது அக்காவும் என் மனைவியும் தோழிகளாம் (இந்த அதீத ‘தற்செயல்’கள் என்னை லேசாக பயமுறுத்தின!)

நான் அதிகம் கண்டுகொள்ளாமல் ஒரு (வியாபாரப்) புன்னகை செய்துவைத்தேன். “நல்லாருக்கீங்களா?” என்றாள், கொஞ்சமாய் சிரித்தாள்.

“இவள தெரியுமா உங்களுக்கு?” மனைவி, என் கைப்பெட்டியை வாங்கிக்கொண்டே கேட்டாள், என்ன சொல்வது என்று நான் தீர்மானிக்கும் முன்னர் நீரஜாவே நான் வழிகாட்டியதை (வழிந்துகாட்டியதை அல்ல!) சொன்னாள், “ஓ…”

அடுத்தடுத்த நாட்களில் நான் நீரஜாவை நிறையவே சந்தித்தேன். ஒன்றிரண்டு முறை அவளை என் காரில் ஏற்றி ஊர் சுற்றிக்கூட காண்பித்தேன்.

“ப்பா… பீச் இவ்ளோ அழகா இருக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவேயில்லை… இந்த ஜோடி ஜோடியா இல்லாம இருந்தா இன்னும் நல்லாருக்கும்”

“அவங்களலாம் நம்மள அப்படித்தானே நெனச்சுருப்பாங்க?” விளையாட்டாய்த்தான் கேட்டேன், ஆனால் அவள் பார்த்த பார்வையில், சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டதில் ஏதோ கண்ணாடிப் பொருளைக் கீழே போட்டு உடைத்துவிட்ட குற்ற உணர்வு எனக்குள்!

அடுத்த ஒரு வாரம் நீரஜா வாசனை இன்றி கழிந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை, தெளிந்த வானத்தில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த கொஞ்சூண்டு மேகத்தின் சோம்பேறித்தனம் எனக்கும் தொற்றிக்கொண்டதைப் போல அமர்ந்திருந்தேன், கையில் இருந்த இதழைக் கண்களால் மட்டும் படித்துக்கொண்டு.

“நீரா வந்திருக்கா, உங்கக்கிட்ட பேசனுமாம், நேத்து சொன்னேனே…” மனைவியின் குரல். நீரஜா. அடிப்படையில் நீல நிறம் கொண்ட சுடிதார் அணிந்திருந்தாள் (துப்பட்டா இல்லை!)

“உக்காரு” என்றபின்தான் அமர்ந்தாள், “என் மேல ஏதாவது கோவமா?”

’இல்லை’ என்றுதான் சொன்னாள். அவளுக்கு இங்கே வேலை வாங்கித்தர உதவி நாடி வந்திருக்கிறாள், அவளிடம் நான் வேறு பதிலை எதிர்ப்பார்க்கக் கூடாதுதான்.

எங்கள் முழு உரையாடலும் ஐந்து நிமிடமே நீடித்தது, மனைவி மூலம் ஏற்கனவே அவளின் படிப்பு, பிற தகுதிகள் திறமைகள் எனக்குத் தெரிந்திருந்தது. ரெஸ்யுமே-வை எனக்கு மின்னஞ்சல் செய்யச் சொன்னேன். “தெரிஞ்ச கம்பெனி எதிலையாவது” என்பது அவள் திரும்பத் திரும்பச் சொன்ன சொற்கள், ’உங்கள் நிறுவனம் வேண்டாம்’ என்றே ஒலித்தன, அவளை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளும் உத்தேசம் எனக்கும் இல்லை, இரண்டாவது யூனிட் தொடங்கியிருக்கும் வேளையில் கவனச்சிதறல் தேவையா?

இரண்டுவாரம் ஓடியது. நீரஜா என்னோடு மீண்டும் சகஜமாக பழகத் தொடங்கியிருந்தாள். என்னைப் பேர் சொல்லியே அழைத்தாள், ஒருவித உரிமை தெரிந்தது அதில். சீண்டுகிறாளா? யதார்த்தமா?

அன்று இரவுணவின் போது என் மனைவி நீரஜாவைப் பற்றி நிறைய பேசினாள், அவள் படிப்பு, திறமை, அழகு… என்னை ஆழம் பார்க்கிறாளோ? காரணம் சீக்கிரமே தெரியவந்தது, அனுதாபம்! நீரஜாவிற்கு வயது முப்பதை நெருங்குகிறது, ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை, “பாவம், செவ்வா தோஷமாம்!”

’இன்னுமா இந்த மாதிரி விஷயம்லாம் இவ்ளோ பிரச்சனை கொடுக்குது?’ என்று வியந்துகொண்டேன்.

அதன் பின் நீரஜாவைப் பார்த்தபொழுதெல்லாம் எனக்கு அவள்மீதான ஆதி கிளர்ச்சி மீண்டும் தலைகாட்டியது.

இரண்டாவது முறையாக அவளைக் கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தேன். எங்களுக்கும் (எனக்கும்!) கடற்கரைக்கும் ராசி இல்லை போலும்… உரையாடல் பொதுவாக தொடங்கி, அவள் வேலைக்கு வந்து வட்டமிட்டுப் பின்னர் நிதானமாக தவிர்க்க முடியாத அந்தப் புள்ளிக்கு வந்தது, திருமணம்.

“கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டா என்ன?” ஆள்காட்டி விரலால் மணலை அளைந்துகொண்டே கேட்டாள். மாலை மெல்ல இருட்டத் தொடங்கியது.

“இப்படி சொன்ன நிறைய பேரை இப்ப குழந்தைகுட்டியோட பார்க்குறேன்” சிரிப்பு!

”எல்லாருக்கும் சைட் அடிக்க, பின்னாலேயே வர அளவுக்குத்தான் தைரியம் இருக்கு, கல்யாணம் ஜாதகம்னா ஓடிப்போயிடுறானுங்க!” ஒரு சிப்பியைப் பொறுக்கி கடலைக் குறிவைத்து வேகமாய் வீசினாள்.

“நிச்சயம் ஒருத்தன் கிடைப்பான்!”

“பார்க்கலாம்…” மணலில் கேள்விக்குறி வரைந்துகொண்டிருந்தாள்.

“அந்த ஒருத்தன் நானா இருந்தா?” கேட்கும் போதே இரத்தம் ஜிவ்வென்று என் முகத்தை நிரப்புவதை உணர்ந்தேன், நிஜமாகவே அந்தச் சொற்களைப் பேசிவிட்டேனா!

இரையைப் பார்க்கும் பருந்தைப் போல கூர்மையாக என்னைப் பார்த்தாள்.

”இதுவும் விளையாட்டுதானா?”

“இல்… இல்ல!”

அவள் படக்கென எழுந்து நின்றாள், லேசான இருட்டில் தொலைவில் இருந்த சாலை விளக்கின் பின்பக்க ஒளியில் அவளது உருவத்தின் அழகான வெளிக்கோடு கொஞ்சம் அச்சமூட்டியது, கைகளில் ஒட்டிய மண்ணைத் தட்டிக்கொண்டாள், நானும் எழுந்து நின்றேன், எதற்கோ தயாராவதைப் போல அழுத்தமாக நின்றுகொண்டாள்,

”என்னைப் பார்த்தா… அவ்ளோ…” அவளால் முடிக்க முடியவில்லை.

நான் எதுவும் சொல்வதற்கு முன்பே என் கன்னத்தில் அவள் உள்ளங்கை பதிந்துவிட்டது. அதிர்ச்சி வலித்தது. கடந்து போன ஒன்றிரண்டு பேர் எங்களையே பார்த்துக்கொண்டு சென்றனர். ஒரு பெரியவர் நின்றேவிட்டார்.

நீரஜா சங்கிலியை இழுத்துக்கொண்டு ஓடும் நாயைப் பிடித்து நிறுத்த சிரமப்படுபவளைப் போல கையைக் கையால் இறுக்கிப்பிடித்துக்கொண்டு நின்றாள். கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியது. இரண்டு நொடிகள்தான் இரண்டாயிரம் ஆண்டுகளைப் போல் ஊர்ந்தது. ஏதோ சொல்ல வந்தவள் ஒன்றுமே சொல்லாமல் கையை உதறிவிட்டுச் சாலையை நோக்கி விறுவிறுவென நடந்தாள். அந்தப் பெரியவர் ஏதோ முணுமுணுத்து தலையில் தட்டிக்கொண்டே தன் நடையைத் தொடர்ந்தார்.

என் மனத்தில் அப்போதிருந்த எதுவுமே இப்போது நினைவில்லை, தூரத்து சாலை ஒளிவெள்ளத்தில் சின்னதாகிக்கொண்டே போன அவளின் நிழலுருவம் மட்டுமே நினைவில் இருக்கிறது.

அடுத்த நாள் மாலை நீரஜாவைச் சந்தித்த போது வழக்கம்போலவே இருந்தாள். அவள் கண்கள் அழுது வீங்கியிருக்கவில்லை, அவள் முகம் வாடி வதங்கியிருக்கவில்லை. எல்லாம் எனது கனவோ? என்னைப் பார்த்து அவள் வீசிய புன்னகை என் குழப்பத்தை இன்னும் ஏற்றியது.

“உங்களைத்தான் பார்க்கனும்னு நெனச்சேன்… இந்தாங்க” ஒரு வாழ்த்து அட்டையை நீட்டினாள், அவளையே திகைப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன் “ம்ம்ம்… திறந்து பாருங்க!”

‘நன்றி. மன்னிக்கவும்’ என்று அழகான பெரிய எழுத்துக்களில், வண்ணக்குழைப்பில், பலவித அலங்காரங்களுடன் அறிவித்தது அட்டை. கீழே சின்னதாய் ‘நீரஜா’.

“எ… எதுக்கு நன்றி?” எப்போதுமே நான் அப்படி உணர்ந்ததில்லை, அவள் சொன்ன பதில் என்னை மேலும் துச்சமாய் உணரவைத்தது,

“எவ்ளோ சாதாரணமா எடுத்துக்கிட்டீங்க என்னை? ரெண்டாந்தாராமா கட்டிக்கவானு எவ்ளோ எளிமையா கேட்க முடிஞ்சுது? அழத்தோனிச்சு, அழலை! அப்படி….” கொஞ்சம் திணறினாள், நிறைய பேச நினைத்ததைப் பேசாமலே விட்டுவிட்டாள், ஒன்றிரண்டு முறை மூச்சை ஆழமாய் அழுத்தமாய் இழுத்துவிட்டு தொடர்ந்தாள், “நீங்க மட்டும் இல்ல, இன்னும் நெறைய பேரு இருக்கான், எல்லாருக்கும் ஒரு பதில்…” சீராகவே மூச்சுவிட்டாள், ”இனி அடுத்து என்ன பண்ணனும்னு என் மனசுல தீவிரமா ஒரு தெளிவு உண்டாயிடுச்சு… இந்தத் தூண்டுதல் உங்களாலத்தான? அதுக்குத்தான் நன்றி!” செயற்கையாக கை கூப்பினாள்.

மனம் என்ற ஒன்றே இல்லாததைப் போல உணர்ச்சிகளற்று உணர்ந்தேன். ஒரு கேள்வி மட்டும் மீச்சமிருந்தது,

“மன்னிப்பு எதுக்கு?” என்னை அறைந்துவிட்டதற்கா?

என்னைத் தீர்க்கமாக பார்த்தாள்.

“காலைல… ஏதோ ஒரு ஆத்திரத்துல… நீங்க என்கிட்ட கேட்டதை உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டேன்!”

ஒரு நல்ல வாழ்க்கை, ஒரு நல்ல வேலை, ஒரு நல்ல மனைவி – போதாதா?!

[முற்றும்]

எழுதியவர் : விசயநரசிம்மன் (22-Jun-15, 11:31 pm)
பார்வை : 488

மேலே