கல்லறைக் காடு

வண்ணத்துப் பூச்சி யொன்று வனம் தேடி வந்திற்று. கட்டிட கானகம் கண்டு திகைத்தது. இரு கட்டிடங்கள் நடுவே சந்திற்குள் சலசலத்த ஓடையோரம் பறந்தோடியது. அங்கு மரங்களெல்லாம் செடிகளாய் வாழ்ந்தன செடிகளெல்லாம் காணாமல் போயின. குளிர்ச்சியூட்டும் வேம்பும் புங்கையும் வேகாத வெயிலில் வாடிக்கொண்டன. சுவரோடு வேர்விட்டு, சுண்ணாம்பு கறைபட்டு நாலேநாலு இலைகொண்டு, நாற்பது ஆண்டு மரம் நின்றது.

குயிலோசை கேட்க வந்து அழுவோசை கேட்க, தேடி வந்த இடம் நாடிச் சென்றது. பச்சை வெள்ளைச் சுவற்றில் பச்சை எச்சம் பட்டது போல் ஒட்டிக் கொண்டிருந்த அரச மரம் கண்டுற்று. ஐந்து இலை மட்டுமே இருந்தாலும் அது ஐந்து நாள் பிஞ்சன்று என அறிந்து அதன் ஓர் இலை மீது அமர்தது வண்ணத்துப்பூச்சி.

வண்ணத்துப்பூச்சி –
வளர விரும்பலயோ
வேரிட தெரியலயோ
தான் மரம் என்று தெரியாதோ
இல்லை மரம் என்றாலே தெரியாதோ

அரச மரம் –
விதைக்கும் தன்விதி அறியும்
வேருக்கும் தன்வழி தெரியும்

வ -
அறிந்தும் அறவழி யேனோ
வேண்டாச் சுவரெல்லாம்
வேர்க்கு சுலபமன்றோ

அ.ம -
மதிலும் பழசுதான்
முறிப்பதும் பழக்கம் தான்

இருப்பினும்...
மதிலுக் குண்டு
புறம் இரண்டு
ஒருபுறம்
தாய் கண்டிராத நோவின் பிழைப்பு
மறுபக்கம்
தாயோடு உறவாடுமோர் சேயின் செழிப்பு

செழிப்பை யொழித்து
பிழைப்பை நிகழ்த்த மனமில்லை

வ -
ஓ.... ஈரமோ நெஞ்சில்

இறப்பு காலம் இசைக்க வேண்டுகிறேன்
மறுபக்கம்
சேய் செழிக்கும் காலம் சொன்னாய்
சோலை செழித்த கால மறிவேன்

தாய் சிறப்பு சொன்னாயே – உன்
தாய் யிறப்பு அறிவாயோ

கூடுகள் பல வைத்திருந்தாள்
கூடும் பறவைகள் பல கொண்டிருந்தாள்

இலை யடியிடம் கொடுபாள்
இட்டுச் செல்லவரும் செனப்பூச்சிகளுக்கு

வெள்ளை மச்சம் கொண்டிருப்பாள்
சிதறிய எச்சத்தால் மட்டுமல்ல
சிந்திய சில குரங்குகளின் தாய்பாலாலும்

ஒண்ட வரும் உயிருக்கெல்லாம்
அண்ட இடம் தருவாள்

பல்லுயிர் காத்த காளியின்
இன்னுயிர் காவிற்கு இந்தச்
சுவரே ஓர் சாட்சிதான்

உன் தாய் மடியில்
ஓர் சேய் யுறவுகொண்டேன்
கூட்டுப் புழுவாய்
கூத்தடித்த காலத்தில்

கல்லறையில் முளைத்துள்ளாய்
கட்டியவன் கொழுத்துள்ளான்
கருணை கொள்ளாதே
கல்லறை உனக்கும் கட்டிடுவான்

முடித்தது வண்ணத்துப்பூச்சி,

சுவரில் விரிசல் சத்தம் கேட்க
வேர்களினி வளரும் நித்தமென அறிய
பறந்தது பட்டாம்பூச்சி.

எழுதியவர் : ந.நா (23-Jun-15, 2:49 pm)
Tanglish : kallaraik kaadu
பார்வை : 517

மேலே