என் குழந்தை

................................................................................................................................................................................................

கசகசத்த மருத்துவமனை வரவேற்பறையில் நாற்பத்தி இரண்டாவது நோயாளியாக உட்கார்ந்திருந்தாள் கல்பனா. இன்ஃபெர்டிலிடி க்ளினிக் எனப்படும் மகப்பேறின்மை சிகிச்சை கிளினிக் அது. அவள் போலவே வந்திருந்த பல பேர் முகத்தில் நம்பிக்கை தவிர வேறு ஒன்றுமில்லை. பொது இடம் என்றும் பாராமல் தங்கள் கணவரின் தோளில் முகம் புதைத்து அழும் பெண்களையும் பார்க்க முடிந்தது. கணவர்மார்களின் முகம் இறுகிப் போய் கல்லில் வடித்ததைப் போலிருந்தது. ஓரிருவர் வைத்திருந்த பணத்தை பெருமூச்சோடு தடவிப் பார்த்தனர். இன்னும் சற்று நேரத்தில் இந்தப் பணமெல்லாம் கௌண்ட்டருக்குள் போய் விடும்..

“பதினாலு லட்சம் செலவு பண்ணிட்டோம்.. ரெண்டு தரம் கருமுட்டையை அப்படியே கர்ப்பப் பைக்குள்ள வைக்கிற பரிசோதனையையும் முடிச்சிட்டோம்.. இன்னும் என்னதான் செய்றது? கடவுள் கண்ணைத் திறக்க மாட்டேங்கிறார்.. ” விசித்து விசித்து அழுதாள் பக்கத்தில் இருந்த பெண்.

கலங்காதே என்று சொல்ல கல்பனாவாலும் முடியவில்லை. ஏனெனில் இதே வேதனை அவளுக்கும் இருந்தது.

“ டாக்டரம்மா என்னதான் சொல்றாங்க? ” என்று கேட்டாள்.

“ நிறைய ஹார்மோன் மாத்திரை சாப்பிட்டுட்டேனாம்; அதனால கல்லீரல் வீங்கிப் போச்சாம். உடல் எடையும் கூடிடுச்சாம். இனிமே ட்ரீட்மெண்ட் எடுத்துக்குறது வீண்தானாம்.. உடல் எடையை குறைச்சுகிட்டு ஒரு ஆறு மாசம் கழிச்சு வரச் சொல்றாங்க... ஆறு மாசம் எனக்கு ஆறு யுகமா இல்ல கழியும்? நான் என்ன பாவம் பண்ணேனோ தெரியலியே? ”

கல்பனா மௌனமாக இருந்தாள்.

அந்தப் பெண் அழுதபடி வெளியேறினாள்.

இப்போது கல்பனாவின் முறை...

“ டாக்டர், என் உயிரே போனாலும் சரி, எனக்குக் குழந்தை வேணும்.. மலடிங்கிற பேர் போகணும்.. வைத்தியத்தைத் தொடர்ந்து செய்யுங்க... ”

கல்பனா கரைந்தாள்..

“ உயிர் போயிட்டா குழந்தையை எப்படி வளர்ப்பே? உம்? ” டாக்டர் லேசாக சிரித்தபடி கேட்டார். “ பழி தீரணுங்கிறதுக்காக குழந்தையைக் கேட்கக் கூடாது... குழந்தைக்காக குழந்தையைக் கேட்கணும்.. நீ நூறு சதவீதம் தாயா மாறினா உன் கையில குழந்தை தவழ்றத யாரும் தடுக்க முடியாது... ”

சொல்லிக் கொண்டே கல்பனாவின் மெடிக்கல் ரிப்போர்ட் அடங்கிய கவரை அவள் கையில் கொடுத்தார். கவரின் மேல் வேறு பெயர் எழுதப் பட்டிருந்தது; உள்ளே இருந்தது கல்பனாவின் ரிப்போர்ட்தான்.

“ டாக்டர், கவர்ல புவனான்னு வேற பேர் இருக்கே? ”

“ ஆமாம்மா; மிஸ்சென்ட். மாறியிருக்கு. அந்தப் புவனா இந்தக் கடிதத்தைத் தொடவே இல்ல; ரெண்டு வாரமா இங்க அனாதையா கிடக்கு. ”

“ மிஸ்சென்ட், அனாதையா கிடக்கு..... ” அந்த வார்த்தைகள் கல்பனாவை என்னவோ செய்தன.

என் கடிதம் எவளோ ஒருத்தி பெயர் போட்ட உறை மூலம் என் கையில் கிடைக்கும்போது என் குழந்தை என் கர்ப்பப் பையில்தான் பிறக்க வேண்டுமா என்ன?

வேறொரு கர்ப்ப்பையில் பிறந்து என் குழந்தை எங்கு அனாதையாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறதோ? நினைத்த மாத்திரத்தில் நெஞ்சமெல்லாம் பால் சுரந்தது கல்பனாவுக்கு.

குழந்தை இல்லாமல் பெற்றோர் படுகிற துயரத்தை விடப் பெரிது பெற்றோர் இல்லாமல் குழந்தை படும் துயரம்....! இதை ஏன் யோசிக்க மறந்தேன்..?

“ நீ நூறு சதவீதம் தாயா மாறினா உன் கையில குழந்தை தவழ்றத யாரும் தடுக்க முடியாது...! ”

எங்கள் ரத்தம்.... ! எங்கள் ரத்தம்....! ! ரத்தத்தில் என்ன இருக்கிறது?

என் பாரம்பரியத்துக்கோ என் கணவரின் பாரம்பரியத்துக்கோ ஏதேனும் தனித்துவம் இருக்கிறதா?

அறிவாளிகளும் ஞானிகளும் பிறந்த பரம்பரையா எங்களுடையது? இல்லை, கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்திருக்கிறோமா? இல்லை, எங்கள் வழித்தோன்றல்களுக்கு ஒரு ரத்தக் கொதிப்போ சர்க்கரை வியாதியோ வராது என்று சொல்ல முடியுமா என்னால்?

பிறக்கிற குழந்தையிடம் என்ன வேறுபாடு? வளர்ப்பதில் வருவதல்லவோ வளமும் வாட்டமும்...! சொந்த மகன் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்த கதையும் உண்டு; வந்த மகன் வாழ வைத்த கதையும் உண்டு..!

கடன் வாங்கி, கடன் வாங்கி மருத்துவச் செலவு செய்து, ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து ஏமாந்து... ஆரோக்கியம் கெட்டு........

இன்னும் கொஞ்ச நாளில் கணவருக்கு வேறு ஊர் மாற்றலாகி விட்டால் என்ன செய்வது?

தத்தெடுப்பு மையத்தில் அவள் புகைப்படத்தையும் அவள் கணவரது படத்தையும் வைத்து குழந்தையோடு மேட்ச் செய்தார்கள். அதாவது தோற்றத்தில் தாய் தந்தையை ஒத்திருக்கும் குழந்தையைத் தேர்வு செய்தனர்.

குழந்தை, தத்தெடுப்பு மையத்துக்கு வருமுன்னரே செய்தித் தாளில் அறிவிப்பு, மருத்துவப் பரிசோதனை, நீதிமன்றத் தடையில்லா சான்றிதழ் என்று பல படிகளைத் தாண்டியது. கல்பனா தம்பதியரும் படிப்படியாக ஒவ்வொரு விதிமுறையாக அனுசரித்து சமூகத்தில் நான்கு பெரிய மனிதர்களின் சிபாரிசுக் கடிதம், உறவினர்களின் பங்கெடுப்பு, கலந்தாய்வு, போலிஸ் அளிக்கும் குற்றமில்லாச் சான்றிதழ் இவைகளைப் பெற்று, காத்திருந்து... குழந்தையைக் கையில் வாங்கி, வளர்ப்புப் பெற்றோர் என்ற நிலையில் சில மாதங்கள் பராமரித்து, நீதி மன்றப் படியேறி....

ஒவ்வொரு முறையும் மெய் வருந்துகிற போது கல்பனா மட்டுமல்ல, அவள் கணவனும் பிரசவ வேதனையை அனுபவித்தான்.

சமூக அங்கீகரிப்பு என்பது சாதாரண விவகாரமல்ல. நீதிமன்றம் உட்பட இத்தனை சமூக அங்கத்தினர்களும் பல நிலைகளில் கூடித் தொடுக்கும் பந்தம் என்கிற மாலை பின்னாளில் மனது மாறி விட்டால் .... என்ற கேள்வியை அப்படியே தகர்த்தெரிந்தது.

பிறப்புச் சான்றிதழில் பெற்றோர் என்ற இடத்தில் அவர்கள் பெயர் இடம் பெற்ற அந்தச் சமயம் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள் கல்பனா தம்பதியர்.

இதே போலவே இன்னொரு குழந்தைக்கும்......

...................................................................................................................................................................................

நான்கு வருடங்கள் ஓடின.

கல்பனாவைப் போலவே மூக்கு முழி நிறத்தோடு ஒரு பெண்ணும் அவள் கணவரின் நடையுடை பாவனையோடு ஒரு பையனும் வழியெல்லாம் அமர்க்களம் செய்து கொண்டு தாய் தந்தையரின் கை பிடித்து கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தனர். குழந்தைகளின் தந்தை பெருமை பிடிபடாதவராக வந்து கொண்டிருந்தார்.

“ உங்க குழந்தைங்களாங்க ? அதான்.. உங்களை உரிச்சு வச்ச மாதிரி இருக்காங்க ....! ”

அர்ச்சகர் விபூதி போட்டு குழந்தைகளை ஆசிர்வதித்தார்.


சுபம்
....................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (23-Jun-15, 7:54 pm)
Tanglish : en kuzhanthai
பார்வை : 428

மேலே