கடவுள் எங்கே

ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர்.

அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், ""எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்!'' என்றார்.

""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான் ராஜேஷ்.

""காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும் இராது. இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை,'' என்றார் முடிதிருத்துபவர்.

ராஜேஷ் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார்.

முடிதிருத்தும் வேலைமுடிந்து, ராஜேஷ் வெளியே போனார்.

அவர் போன சற்று நேரத்தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு ஆள் நிற்பதை கடைக்காரர் பார்த்தார்.

அந்த ஆளைப் பார்த்தால், முடிதிருத்தும் கடையை மாதக் கணக்கில் எட்டிப் பார்க்காதவர் போலத் தோன்றியது. அவ்வளவு அடர்ந்தும், சடைபிடித்த முடியும் தாடியும் இருந்தன.

அப்போது முன்னால் வந்து போன ராஜேஷ் மீண்டும் கடைக்கு வந்தார்.
""என்ன?'' என்று கேட்டார் முடிதிருத்துபவர்.

""ஒரு விஷயம்! முடிதிருத்துபவர் யாருமே இல்லை என்று சொல்லலாம்,'' என்று வந்தேன்.

""என்ன உளறுகிறீர்? இதோ! நான் இருக்கிறேன். நானும் ஒரு முடிதிருத்துபவன் தானே? அப்படி இருக்க முடிதிருத்துபவரே இல்லை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?'' என்று எரிச்சலாக கேட்டார் முடிதிருத்துபவர் .
""இல்லை! முடிதிருத்துபவர் இருப்பது உண்மை என்றால் அதோ தெருவில் நிற்கிற அந்த ஆசாமி இப்படி அலங்கோலமான தலைமுடி, சிக்குப்பிடித்த தாடியுடன் இருப்பானேன்?'' என்று கேட்டார் ராஜேஷ்.

""ஓ! அதுவா? விஷயம் என்னவென்றால், அந்த ஆசாமி என்னிடம் வருவதில்லை!'' என்றார் முடிதிருத்துபவர்.

""சரியாகச் சொன்னீர்கள். அதுதான் விஷயம். கடவுளும் இருக்கவே செய்கிறார். ஆனால், என்ன நடக்கிறது என்றால், மக்கள் அவரை அணுகுவதில்லை. அவரைத் தேடிப் போவதில்லை. அதனால்தான் எங்கும் நிறைய துன்பமும், வேதனையும் உலகில் நிறைந்துள்ளன!'' என்றார் ராஜேஷ்.
உண்மையை உணர்ந்தார் முடிதிருத்துபவர்.

அன்பே சிவம்......

எழுதியவர் : (24-Jun-15, 11:01 am)
Tanglish : kadavul engae
பார்வை : 353

மேலே