கண்ணதாசன் ஒரு காவியம்
கண்ணதாசன் ஒரு காவியம்
=============================
"சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்""
தமிழின்மேல் கண்ணதாசன் கொண்டக் காதல்
வெந்த பின்பும் மணந்ததே அவனின் சாம்பல்... !!
உரைத்ததுபோல் தமிழ் படித்தே இறந்தான் கவிஞன்
இறந்த பின்னும் புவியினிலே வாழும் கவிஞன்
அவன் சாம்பலிலும் தமிழ் மணந்து வெந்ததல்லவா
கண்ணதாசன் சாகாவரம் பெற்றதமிழ் வேந்தனல்லவா??
கன்னித் தமிழ் கனி ரசத்தை பிழிந்தே எடுத்தான்
கனிரசத்தை போதையேற கிறங்கிட கொடுத்தான் - அவன்
பாட்டினிலே இமை செருகி விழியும் மயங்கும்
தாலாட்டினிலே மனமும் கூட சுகமாய் உறங்கும்!!!
அர்த்தமுள்ள இந்து மதம் வாழ்விலக்கணம் பேசும்
வாழ்விலக்கணம் படைத்தவனை இவ்வுலகே பேசும்
அமைதியது வேண்டுமெனில் இந்நூலினைப் படி
படிக்கும்போது தெளிவுறலாம் நாம் வாழ்வதெப்படி!!!
காதலையும் கடவுளையும் பாட்டினில் வைத்தான்
செய்யும் கர்மவினை இரகசியத்தை ஏட்டினில் வைத்தான்
எடுக்க எடுக்க எள்ளளவும் குறையா அமுதாம்
அவன் எழுத்தெல்லாம் படிக்க படிக்க திகட்டா சுவையாம்!!!
இயேசு காவியத்தை உலகினுக்கே அளித்த மா கவி
கண்ணதாசன் வாழுகிறான் புவியினிலே காவியமாகி
தத்துவங்கள் புதினம் யாவும் படைத்த மேதாவி
கண்ணதாசனைப் போல் கண்டிடுமோ இனி இப்புவி!!!
--------------------------------------------------------------------------------------
குறிப்பு - தளத்தினில் பதிவிடப்பட்ட கவிதை.
சிறு மாற்றங்கள் செய்து மீண்டும் பதிவிட்டிருக்கிறேன்.
-------------------------------------------------------------------------------------