அழகென்போம் இன்றதை-ரகு

நெற்றியைக் குறிவைக்கும் காலங்கள்
---நித்தம்நித்தம் எத்தனையோ ஜாலங்கள்
பற்றினாலும் எரியாமல் புகைகின்றக் கனவுகளால்
---பரிதவிக்கும் வாழ்வினது கோலங்கள்

விடிந்துவடிந்து தீர்கிறது கிழக்கும்
---வாசல்கூடத் தாண்டவில்லை முழக்கம்
ஓடிந்துவிட்டப் பிறகுமொருக் கிளைபோலத் துளிர்த்து
---உயிர்த்திருத்தல் நம்பிக்கையின் வழக்கம்

மழைநாட்கள் எப்பொழுதேனும் துளிர்க்கும்
---மௌனமொழி வெற்றியென சிலிர்க்கும்
பிழையாகும் நாழிகையைப் பிற்பாடு கண்டுணரப்
---பிறப்புதனில் சாடல்கள் தெளிக்கும்

வல்லினமா மெல்லினமா வாழ்க்கை
---வழிசல்களில் சருகுகளா வேட்கை
சொல்லியடித் திருக்கும் சோர்வில்லா முயற்சியது
---சிதைக்காதோத் தோல்வியதன் போக்கை

கிழித்திடலாம் வறுமையெனும் ஒன்றதை
---கிளர்ந்திடலாம் சாதித்தல் என்றதை
ஒழித்திடலாம் வாழ்வின் ஒவ்வாமை யாவினையும்
---ஒழித்தநொடி அழகென்போம் இன்றதை !

எழுதியவர் : சுஜய் ரகு (24-Jun-15, 11:29 am)
பார்வை : 67

மேலே