அசைவின் அர்த்தம் அவள் - தேன்மொழியன்
 
 
            	    
                அசைவின் அர்த்தம்  அவள் 
~~~~~~~~~~~~~~~~~~~~~~
துளசி செடி 
தூரலில் நனைந்ததென 
துப்பட்டாவால் துவட்டிய 
உன் மழலை மனதில் 
மண்ணும் மணிக்கொருமுறை 
சுவாசத்தில் சுகமாகிறதோ ..? 
ஆய்வக அறிவியலுக்கு 
பூவை பறிக்காமல் சென்று 
அத்துணை திட்டிற்கும் 
அழகாய் சிரித்தவளாய் 
பூவின் உயிர் படித்தாயோ ..? 
சிலந்தி வலைக்குள் 
சிக்கிக்கொண்ட தும்பிக்கு 
உன்னுதடு ஊதிய காற்றால் 
உலக சுதந்திரம் கொடுத்தாயோ ..? 
மாவரைத்த உன் கைக்கு 
மஞ்சள் வளையலும் வேண்டாமென 
தினமுழைக்கும் உன் தந்தையை 
தெய்வ மகளாய் வளர்த்தாயோ ...? 
- தேன்மொழியன்
 
                     
	    
                

 
                             
                            