நீ நிரந்தரமானவன் அழிவதில்லை -கண்ணதாசன்

மு.கு.: ஜூன் 2011-ல் நிகழ்ந்த ஒரு கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில் பாடி முதல் பரிசு பெற்ற கவிதை! இந்த ஜூனில் இதை எழுத்து நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்...

[அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]

எழுத்தெனும் மக்கள் கூட்டம் ஏறுசொல் வீரர் கூட்டம்
பழுதறு பாட்டின் படைகள் படுபொருள் ஆன சுற்றம்
இழையுநல் அணிகள் பெண்டிர் இகல்கடி அறநூல் அமைச்சர்
கெழுமிய செங்கோல் கொண்டு செந்தமிழ் கவியாள் வேந்தே!

உரமிகு தானை கொண்டு உலகினை முழுதாய் ஆள
அரசரும் விழைந்த துண்டு அதுஅவர்க் கான தில்லை
தரமிகு தமிழின் பாவால் தரணியை முழுதாய் ஆளும்
வரமதைப் பெற்றாய் நீயே! வரகவிக் கொற்றன் நீயே!

சூழலைச் சொன்ன நொடியில் சுவைபடப் பாடல் தருவாய்க்
கூழைமை கொள்ளாய் யார்க்கும் குனிந்துநீ பணிந்து நில்லாய்
ஏழைக்கும் புரியும் இனிய எளியபல் பாக்கள் கொண்ட
பேழைநீ! கவியே உந்தன் பெருமைக்கும் அளவொன் றுண்டே?

திரைப்பட உலகில் மற்றும் சிறப்புறு கவிதை உலகில்
துருவநன் மீனாய் ஒளிரும் சுடர்கவி கண்ண தாச!
இருந்தவர் இருப்போர் வருவோர் இதயங்கள் தானாள் வதனால்
நிரந்தரம் ஆனாய் நீயே! நித்தியக் கவியால் நீயே!



[எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய சந்த விருத்தம்]

தேனொழுகும் பாக்கள்பல ஈன்றவனும் நீயே!
சேருதிரைப் பேருலகில் ஓர்துருவன் நீயே!
வானொழுகுங் கூறுபுகழ் சேர்த்தவனும் நீயே!
மாபொருள்கள் நேர்பலநூல் யாத்தவனும் நீயே!
தானொழுகும் தீக்குணத்தை மீறியவன் நீயே!
தாய்த்தமிழ்க்காய்ப் பாய்ரயிலின் கீழ்படுத்தாய் நீயே!
ஊனொழுகும் உடல்நீப்பின் உனக்குண்டோ மரணம்?
உள்ளங்களில் நிரந்தரமாய் உறைபவனும் நீயே!

[’தான்’ ஒழுகும் தீக்குணம் – ’ஆணவம்’]

எழுதியவர் : விசயநரசிம்மன் (25-Jun-15, 7:51 pm)
பார்வை : 492

மேலே