கடவுள் ஊரில் இல்லாத நாட்களில்

கடும் மழையையும்
கொடும் வெப்பத்தையும்
புயலையும் பூகம்பத்தையும்
வெள்ளத்தையும் எரிமலையையும்
இன்னோரன்ன தாக்கங்களையும்
தாராளமாய் தந்துவிட்டு
ஓடிப்போகிறது
சொல் பேச்சு கேட்காத இயற்கை.

குழந்தைத் தொழிலாளிகளையும்
அகதிகளையும் அனாதைகளையும்
வறுமையையும் விதைக்கப்பழகிவிடுகிறது
மனசாட்சி மறைக்கும் சமூகம்.

அலுவலகத்தில் குட்டித்தூக்கம்
போடும் பிரம்மன்
நேரம் கடந்துவிட்டிருப்பதால்
அவசரத்தில் படைத்து விடுகிறான்
மாற்றுத் திறனாளிகளை.

மனைவியோடு
கடைத்தெருவுக்குப் போய்விடும்
இயமன் திரும்பி வந்ததும்
அன்றைய நாட்களின் கணக்கை
சரிசெய்ய தொழிலில்
காட்டுகின்ற அவசரத்தில்
நிகழ்ந்து விடுகின்றது
குழந்தை மரணம்.

பணத்தாசை மோகத்தில்
தவணை முறை மரணத்திற்கு
ஒப்புதல் வழங்குதலாய்
நாட்டப்பட்டுவிடுகின்றன
போதை வஸ்த்துக்களின் விதைகள்

கேட்க ஆளில்லை என்னும்
கேள்வி ஞானங்களில்
அரங்கேற்றப்பட்டு விடுகின்றன
சில பாலியல் வன்கொடுமைகள்.

எதிலும் கலப்படம்
என்றான நிலையில்
விஷத்திலும் கலப்படம் செய்து
தர்கொளையாளிகளைக் காப்பாற்றும்
ஏமாற்றுப் பேர்வழிகள்
உணவுகளால் கொலைசெய்வதற்கான
வரையறையற்ற
குத்தகை எடுத்துக் கொள்கிறார்கள் .

குணப்படுத்தல் மாறி
பணப்படுத்தல் என்றான வைத்தியங்களால்
உற்பத்தியாகின்றனர் நோயாளிகள்.

பகல் கொள்ளை என்பதன்
பாடங்கள் போதிக்கப்படும்
கூடங்களில் ஏலத்தில்
விற்பனையாகிறது கல்வி.


உயரதிகாரியை மதிக்காத
அல்லது மறந்துவிடும்
கடைநிலை உத்தியோகத்தர்களாய்
தன்னிலை மறக்கும்
தலைவர்களும் கடவுளாகிப் போகிறார்கள்
கடவுள் ஊரில் இல்லாத நாட்களில்..

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Jun-15, 4:16 am)
பார்வை : 104

மேலே