26-06-2015 ----கவிஞனும் கற்பனைத் திறனும்--02

தற்காலக் கவிஞரும், கவிஞர்களுக்கெல்லாம் தூக்கிப்பிடிக்கும் கையுமாயிருக்கும் ஒருவர் தமிழில் பேசு என்று சொல்ல வந்தபொழுது,

வணக்கம் சொல்வாய் கண்ணே- நீ
வணக்கம் என வளர்தமிழில் சொல்வாய்!
சுணக்கம் இன்றி அழகிய தமிழில்
சுவை பலசொல் சொல்வாய் கண்ணே!----- என்று கூறிவிட்டுத் தொடர்வார்:
உயிராம் தமிழில் பேசு
உயர்வாய் வாழ்வில் உண்மை
அமுதாம் தமிழில் பேசு
அடைவாய் இன்ப வாழ்க்கை
தேனாம் தமிழில் பேசு
தெளிவாய்ப் பெறுவாய் நன்மை
தாயாம் தமிழில் பேசு
தடையில்லாப் புகழ்பெறுவாய்-----என்று அடுக்கிக்கொண்டே செல்வார்.
அவர் வேறு யாருமில்லை புதுவை காயத்ரி என்பவர்தான்.
இதில் தமிழ் மீது அவர் கொண்ட பற்றும் ஆர்வமும் தெளிவாக விளங்குகின்றது. அப்படித் தமிழ் மீது பற்றுக் கொண்டவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தைத் தேடிப் பிடித்துப் படிப்பதையும், கிடைக்கும்பொழுது தவறாமல் படித்துச் சுவைப்பதையும் தவறாமல் கைக்கொண்டு வருவார்கள். இக்கட்டுரையின் 1-ஆம் பதிவினுக்குக் கிடைத்த பின்னூட்டத்தைப் படித்துக் கொண்டிருக்கையில் அப்படிப்பட்ட தமிழன்பர் ஒருவரின் பின்னூட்டக் கருத்தில் ‘மருதக் காட்சியை ஒரு பாடலில் நம் முன்னே ஓவியமாக எடுத்து வைப்பான் கம்பன்’ என்று சொல்லியுள்ளார். அப்பாடலைத்தான் முதலில் நான் நினைத்தாலும், அது பலரால் அடிக்கடி சொல்லப்பட்ட ஒன்று என்பதாலும், எனது 1-ஆம் பதிவில் குறிப்பிட்டுள்ள பாடல் நான் அதிகமாகக் கேள்விப்படாத பாடல் என்பதாலுமே இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். எப்பொழுது மருதக் காட்சியைப் பற்றி அவர் சுட்டிக் காட்டி விட்டாரோ, அதன் பின்னும் நான் அதைப் பற்றிக் குறிப்பிடாமல் மேலே தொடர விரும்பவில்லை.

கம்பன் கற்பனை என்பதை எழுதப் போந்த முனைவர் ச.வே சுப்பிரமணியன் அவர்கள், மேனாட்டறிஞர் ஒருவரின் கூற்றுப்படி, கற்பனை மூவகைப்படுமென்று சொல்லி, அவைகளை
1.இயைபுக் கற்பனை(Associative imagination);
2.ஆழ் கற்பனை (Penetrative imagination); மேலும்
3.சிந்தனைக் கற்பனை(contemplative imagination)
என்று குறிப்பிட்டுவிட்டு மேலும் சொல்வார்.:
மனிதனின் அறிவாற்றலின் வெளிப்பாடே இயைபுக் கற்பனையை உருவாக்குகிறது; வேறுபட்ட கூறுகளை இசைவுபடுத்துவதாலும், ஒழுங்குபடுத்துவதாலும்,இது ஏற்படுகின்றது, மருதம் கொலுவிருக்கும் காட்சியைக் கம்பன் காட்டும்போது இவ் இயைபுக் கற்பனை வெளிப்படுகின்றது என்பார்.
அவரே, வேறுபட்டுக் கிடக்கும் இயற்கைப் பொருட்களைச் சேர்த்தும், சில கூறுகளைத் தேர்ந்தும், இணைத்தும் இயைபுக் கற்பனைக் காட்சியாகப் கவிஞன் படைகிறான் என்பார். இனி, கம்பனின் மருதக் காட்சி:

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை,கண் விழித்து நோக்கத்
தெண்,திரை எழினி காட்டத் தேன்,பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ...(35)
சோலைகளிலே மயில்கள் ஆடவும், தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்கவும், மேகங்கள் மத்தளம் போல ஒலிக்கவும், குவளைக் கொடிகளில் மலர்கள் கண்போல் விழித்துப் பார்க்கவும், நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலை போலக் காட்டவும், தேனை ஒத்த மகர யாழ் இசை போல, வண்டுகள் இனிமையாகப் பாடவும், (இவ்வாறு இசையும் கூத்தும் பொலிகின்ற அரங்கிலே)- மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது.
என்பது இதன் பொருளாகும்
ஒரு நாடகக் காட்சியின் பல கூறுகளைத் தேர்ந்து இயைபுப் படுத்திக் காட்டுவான் போலக் கம்பன், அவையின்கண் அரசன் ஆடல்கண்டு வீற்றிருப்பதை மருதக் காட்சியோடும் இயைபுப்படுத்தி, இக்கற்பனையைப் படைத்துக் காட்டி இருக்கிறான் அல்லவா!
இதுவும் ‘கவிஞனும் கற்பனைத் திறனும்’ என்பதற்குத் தக்கதொரு எடுத்துக்காட்டுத்தான் அல்லவா!
(தொடரலாம்)

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (26-Jun-15, 12:13 pm)
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே