காலைச் சாரல் 06 - செய்திகள்
அதிகாலை தோன்றிய எண்ணங்கள்
26/6/2015
eluthu வலைதளத்தில் 12/6/2015 அன்று "இன்றைய செய்தி" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். வழக்கம்போல் என் கவிதைகளுக்கு அதிகமாக பார்வைகள் இருப்பதில்லை. நானும் அதைப் பற்றி இப்பொழுதெல்லாம் அவ்வளவாகக் கவலைப் படுவதில்லை. திடீரென்று நேற்று ஒரே சமயத்தில் நான்கு வாசகர்கள் கருத்துப் பதிந்து இன்ப அதிர்ச்சி அளித்து விட்டார்கள். இவர்களைத் தொடர்ந்து இன்னும் இருவர். பன்னிரண்டு நாட்கள் கழித்து ஒரே சமயத்தில் இவர்கள் பார்வையில் இந்தக் கவிதை பட்ட காரணம்தான் புதிர். (தினம் நூறுக்குமேல் இங்கு கவிதைகள் குவியும்)
****
அந்தக் கவிதை ஊடகத்தைச் சாடியே இருந்தது...
ஊடகங்கள் செய்யும் பல செயல்கள் எனக்கு முழுவதுமாகப் புரிவதில்லை...
ஏன் ஆக்கபூர்வமான செய்திகள் வருவதில்லை? / முக்கியத்துவம் கொடுப்பதில்லை? என்பது என் தீராத ஆதங்கம்.
****
சமீபத்தில் ஒரு செய்தி சின்னதாக கட்டம் போட்டு வெளியிட்டிருந்தார்கள். ஒரு ஏழை விவசாயியின் இரண்டு மகன்கள் அதிக மதிப்பெண் பெற்று I.I.T.யில் தேர்வாகியுள்ளனர்... ஆனால் கல்லூரியில் சேர பணம் இல்லை என்று. அடுத்த நாள் அரசாங்கம் முழு செலவையும் ஏற்றுக் கொண்டது. எவ்வளவு நல்ல விஷயம். இது போன்று நாட்டில் இன்னும் எத்தன பேர் உதவி பெறக் காத்திருக்கின்றனரோ!
(அகில இந்தியாவுக்கு ஒன்று தானா.... மற்ற ஊமைகளும் ஒளி(!) பெற ஊடகங்கள் கண் திறந்தால் என்ன?)
****
ஆனால் செய்தித் தாளில் காண்பதென்ன!
* ஏமாற்றிச் சென்ற மனைவியைத் தேடிச் சென்று கணவன் வெட்டிக் கொலை! (இதோட variation காதலன் / காதலி)
* வீடு புகுந்து பெண் கற்பழிப்பு!
* பூட்டிய வீட்டில் புகுந்து கொள்ளை! ('துணிகர' என்று சேர்த்துக் கொள்ளுங்கள்)
* போலி நகை மாற்ற முனைந்த பெண் கைது
* நேற்றைய விபத்துக்களின் விரிவான இறந்தவர் எண்ணிக்கை
* அரசியலில் எதிர் கட்சி போராட்டம், ஆளுங் கட்சி மேல் குற்றப் பட்டியல், அல்லது பழய குற்றச் சாட்டின் இன்றைய நிலவரம்..
* உலகச் செய்திகளிலும் இதுவே உலக அளவில்...
* மிகவும் கவலை தருவது "நகர இணைப்பு" என்று கூடுதலாக வரும் எட்டு பக்கங்கள்... இதில் சினிமா செய்திகள் மட்டும்... எங்கள் நகரத்தில் சினிமா மட்டுமே செய்தி என்ற ஒரு மாயத் தோற்றம்.
* மேற்கண்டவை போக மீதி இடங்கள் விளம்பரம், விளம்பரம், விளம்பரம்... (உண்மையில் நிறைய விளம்பரங்களுக்கு இடையில் கொஞ்சம் செய்தி என்ற பெயரில் மேற் கூறியவைகள்)
****
செய்திகளைச் சொல்லும் தொலைக்காட்சி சானல்கள் ஒரு தனி ரகம்....
* கட்சிக்கு ஒன்று என்றாகி விட்டதால்... இங்கு இன்றைய செய்தி என்பது குருடர்கள் பார்த்த யானை தான்.
* அதிலும் ஒரு சானலில் "பீதி" (பெரிய எழுத்தில் படியுங்கள்) என்ற சொல் இல்லை என்றால் அவர்களால் செய்தியே சொல்ல முடியாது. முதல் ஐந்து வாக்கியங்களில் ஆறு பீஈஈஈதீஈஈ இருக்கும்... ஏழாவதற்குள் நான் சானல் மாற்றி விடுவேன்.
* இரண்டாவது, விவாதம் என்ற பெயரில் யாரும் யாரையும் பேச விடாமல் எல்லோரும் ஒரே சமயம் பேசுவது.... இவர்கள் சேர்ந்திசைக்கும் இரைச்சல் கச்சேரியை பார்க்க / கேட்க சிறப்புத் திறன் வேண்டும்.
* இதைத் தவிர செய்தி என்பதில் தாளுக்கும் காட்சிக்கும் அதிக வேறுபாடு இல்லை.
****
முடிவில் இன்றைய செய்தி என்ன என்பதில் நிறைய குழப்பம்.
------ முரளி