களவு கானல்
அய்யய்யோ களவு போனதே!
பொக்கிஷமாயிற்றே அவை
எப்படி சுவாசிப்பது இல்லாமல்
வெறுமை நிறைந்த வீதிக்குள்
கானலே காட்சியாகி, பின்
அஸ்தமன நொடியில் இருளைக் கொட்டிவிட்டு
மொழிகளையெல்லாம் உருவிக்கொண்டு
இது தான் இனி நீ வசிக்குமிடமென்று
தனிமையின் மௌன அறைக்குள் சிறைப்பட்ட உணர்வு!
''அய்யய்யோ! மீட்டுவிட வேண்டும்!'' என்று நான் கூச்சலிட
களவு போன அத்தனை வார்த்தைகளும் கொல்லென சிரித்தன
என் கனவினைக்கண்டு!
வார்த்தைகளின்றி கவிதைகள் குன்றி எப்படி இயலும் வாழ்தல்?
கற்றல் துவங்கிய நொடிமுதல் என்னைப் பற்றிக் கொண்ட காதல்
கனவில் களவு போனால்கூட சிறு கணமும் ஏற்காது இதயம்
விடிந்துவிட்டது!
தேநீர் கோப்பையின் ருசி விடைபெறுமுன்
எழுதுகோல் படைத்தது இன்னொரு கவிதை
ஏகாந்தமாய் சுவாசிக்கிறேன் வார்த்தைகளில்...