திருவலிவலம் பதிகம் 8

முதல் திருமுறையில் 123 வது தலமாக ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருவலிவலம் பதிகத்தில் 8 ஆம் பாடல்.

இரவண னிருபது கரமெழின் மலைதனின்
இரவண நினைதர வவன்முடி பொடிசெய்து
இரவண மமர்பெய ரருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே. 8

பொழிப்புரை:

தன்னை வழிபட்டு தத்தம் குறைகளைச் சொல்லி அடியார்கள் யாசிக்க, தன் மனத்தில் தோன்றும் கருணையாகிய நிதியை வழங்கும் வலிவலத்தில் உறையும் இறைவன், இராவணனின் இருபது கரங்களையும் அவனுடைய பத்துத் தலைகளையும் அழகிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்திப் பொடி செய்து பின் அவன் இரந்து வேண்டி நினைத்த அளவில் அவனுக்கு வேண்டுவன அளித்து இரா வணன் என்ற பெயரையும் அருளியவன் ஆவான்.

குறிப்புரை:

இராவணன் செருக்கடங்க, விரல் நுதியையூன்றி அவன் இரக்க, மீட்டும் அருள் செய்தவன் இவன் என்கின்றது.

இரவணன் - இராவணன்; எதுகை நோக்கி இடைகுறுகிற்று.

இராவண்ணம் - இருக்காத வண்ணம்.

இரவணம் அமர் - அவன் அழுதலைப் பொருந்த.

இரவு அண்ண நிகர் - - - இறை - அடியார்கள் தத்தம் குறைகளைச் சொல்லியாசிக்க அருளும் இறைவன்.

குறிப்பு:

திருவலிவலம்:

இறைவர் பெயர் இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்,

இறைவியின் பெயர் வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி,

தல மரம் - புன்னை, தீர்த்தம் - சங்கர தீர்த்தம்.

தல வரலாறு: வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.

சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

சிறப்புகள்: வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.

இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.

தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

கோவிலுக்குச் செல்லும் வழி:

தமிழ் நாட்டில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம்.

திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவிலுள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-15, 8:45 pm)
பார்வை : 81

சிறந்த கட்டுரைகள்

மேலே