காலைச் சாரல் 08 - மாற்றம்

29-6-2015
அதிகாலை எண்ணங்கள்.... "மாற்றம்"
****

காலைச் சாரலில் இது எட்டாவது பகுதி. எழுத ஆரம்பித்ததிலிருந்து இதற்கு ஒரு 'Tag Line" வைத்திருக்கிறேன்...

முதல் நான்கு பகுதிக்கு: "அதிகாலை விழிக்கும் பொழுது தோன்றும் எண்ணங்கள்...."

ஐந்தாவது பகுதிக்கு: "அதிகாலை தோன்றும் எண்ணங்கள்...."

ஆறு, ஏழு பகுதிக்கு: "அதிகாலை தோன்றிய எண்ணங்கள். "

இன்று முதல்: "அதிகாலை எண்ணங்கள்...." 'Tag Line'னுடன், "மாற்றம்" என்று ஒரு சின்ன தலைப்பு.... இதுவும் நிரந்தரமல்ல, மாறலாம்...
****
மாற்றம் ஒன்றே நிரந்தரமானது..
எதுவும் மாறும் என்ற நம்பிக்கையும் பயமும் இருக்க வேண்டும்.... அப்பொழுதுதான் நல்லவை நடக்கும்.... ஜன நாயகமும் அப்படிப் பட்ட நம்பிக்கைதான்... அந்த பயத்தை உண்டாக்கும் சக்தி எங்கு இருக்கிறது என்று புரிந்தால் சரி.....
****
அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் நூறு பேர் அமர்ந்து கொண்டு, மேஜை மேல் கட்டுக் கட்டாக கோப்புகளும், காகிதங்களும் அடுக்கி வைத்துக் கொண்டு மெத்தனமாக செயல்பட்ட காலங்கள் உண்டு.. இவர்களிடம் காரியம் ஆக வேண்டும் என்றால் குதிரைக் கொம்பு தான்... வாய்தா மன்னர்கள்... ஆனல் இவையெல்லாம் மாறி பல வருடங்கள் ஆகி விட்டது... நூறு பேர் இருந்த இடத்தில் பத்து பேர்... காகித மலைகளும், கோப்புகளும் மறைந்து விட்டன.. பல வேலைகள் யாரையும் அனுகாமலே இப்பொழுது நடக்கிறது.
****
இது சற்று விநோத வேடிக்கையான அனுபவம்..
முதல் வேலை (1973). எனது மேலதிகாரி நான் நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்கள் / கோப்புகளுக்கு 'A' என்று குறிப்பிட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். என் பெயர் அல்லது முதல் எழுத்து 'M' தானே போட வேண்டும். கேட்டதற்கு ஏதோ மழுப்பிவிட்டார். விசாரித்ததில் அவர் கீழ் முதன் முதலில் பணி புரிந்தவர் பெயரின் முதல் எழுத்து 'A' என்று. அதற்குப் பின் பணி புரிந்த மூவருக்கும் 'A' தான். (அந்த மூவரும் ரொம்ப சாது போல) சில நாட்கள் நான் முரண்டு பிடித்த பின் மனமில்லாமல் மாறினார்.
****
எது ஒன்று 'இப்படித்தான் பல காலங்களாக' என்று பிடிவாதம் பிடிக்கிறதோ.. அதற்கு மாற்றம் தேவைப் படுகிறது.
பிறந்த குழந்தையை தாதி ஒரு துணியில் சுற்றி காட்டும் போழுது அது கண்ணை உருட்டும் அழகு கொள்ளைதான்.... ஆனால் அதை சீராட்டிப் பாராட்டும் போது மேலும் அழகு பெருகிறது..
சிறந்த சிற்பி ஒவ்வொரு முறை தான் வடித்த சிலையைப் பார்க்கும் பொழுதும் ஏதோ மாற்றம் செய்ய நினைக்கிறான்.
எழுத்தும் அவ்வாறே... (பெற்றவுடன் காட்டும் குழந்தையைப் போல் பதிந்து விட்டாலும்.... ) மாற்றங்கள் தேவையெனில் செதுக்கத்தான் வேண்டும்....
****
மாற்றங்களைத் தேடுங்கள்....
அது சரி....... "காலைச் சாரலில்" 'ச்" தேவையா....?

----- முரளி

எழுதியவர் : முரளி (29-Jun-15, 9:20 am)
பார்வை : 268

மேலே