கைம்பெண்

சிராய்ப்புகள் செய்த சிதைவுகள்
நினைவுகளை அரித்து செல்லரிக்க வைக்கும்
செல்ல பிள்ளையின் மணப்பந்தலில்கூட
அட்சையை தூக்கி வாழ்த்த முடியாது தவிக்கும்.

கோழித்தூவல் வண்ணச் சேலை குறுகி
தன்னுடலில் சமாதானக் கொடியை பறக்க விடும்
சம-தானங்கள் அநேகம்
சமாதியாகி சமாதானங்கள் செய்து கொள்ளும் .

தென்றல் தீண்டும்போது தீயாகச் சுடும்
தேடிய சொந்தங்கள் தீட்டென்று விலக்கும்.
மன்றத்தில் ஓடிவரும் பாட்டு முதற்கொண்டு
மல்லிகைப்பூச் சரங்களும் பார்த்து கொல்லும்.

அங்காடியில் அவளுக்கென்று
வாங்கப்பட்ட குங்குமச் சிமிழில்
சாந்துக்குப்பதில் சங்கடங்கள் வைத்து விட்டார்
ஆண்டவர் அவளுக்கு கொடுத்த
அட்சய பாத்திரத்தில்
அன்னத்திற்குப் பதில் அழுகையை நிரப்பி விட்டார் .

இருபாலில் ஒருபாலுக்கு மட்டும்
ஏனிந்த வெறுப்புப்பால்
அப்பால் யோசித்துப் பார்க்க.
அட இந்த சமூகமே அழுக்குப்பால்

ஊரல்லாம் அவளை
ஒதுக்கி வைத்த போதும்
உலகப் புகழ் தமிழ் மட்டும்
அவளுக்கு பொட்டிட்டு
அழகு பார்த்து சிரித்தது
-கைம்பெண்- என்று.

எழுதியவர் : சுசீந்திரன். (29-Jun-15, 11:04 pm)
பார்வை : 97

மேலே