இலைகள்

மழைக்காலத்துக்கான மேகங்கள்
உதிர்கின்ற இலைகளில் இருந்துதான்
சேமிக்கின்றன
வானவில்லுக்கான நிறங்கள்!

இதழ்கள் பரப்பி பூப்பதில்
காம்புகளின் வெற்றிடங்கள் நிரப்பும்
மலர்களை அந்நியப்படுத்திவிட்டு
இலைகள் பரப்பி நிறங்களை
புஷ்பிக்கும் இலையுதிர்கால
வர்ணங்களில் வசப்படுகிறது
மரணத்தின் அழகு

மர வீடுகளின்
கூரைகளுக்கு வேயப்படும்
பச்சை ஓடுகள் இலைகள்

தூக்கி வளர்த்தக் கிளைகள்
துரத்திவிடும் பட்சத்தில்
பாதத்தில் சரணடையும்
பழுத்த இலைகள்
வேர்களுக்கு விருந்து
கொடுக்கின்றன உரமாய்.

தாமரை இலைகளின்மேல
தண்ணீராய்
தாவர வளர்ப்பின் மேல்
ஒட்டாமை வளர்க்கின்ற
பிரபஞ்சத்துக்கு
வரும்பஞ்சத்தை
பாடமாக்கிப் போதிக்கின்றன
இலைகள் .

இலைகள் இயற்கை வைத்தியர்கள்.

தூதுவளை ,துளசி
கொத்தமல்லி புதினா
வல்லாரை முருங்கை என்று
நீள்கின்ற மூலிகை இலைகள்
இயற்கை வைத்திய மாளிகை

புழுக்கள் கூடுகட்ட
தன்னையே கொடுக்கும்
ஈகைக் குணத்தில்
வள்ளல்களை மிஞ்சிவிடுகின்றன

விலங்குகள் கேட்டாலும்
மனிதன் கேட்டாலும்
இலைகள் இல்லை என்று
கைவிரிப்பதில்லை .

சருகாகி உதிர்ந்தாலும்
மக்கி உரமாகும் வரமாகும்
இலைகள் ஒருநாளும்
கைவிரிப்பதில்லை.


வாழை இலைபோட்டு
வயிறார உண்ணும்போது
எடுத்தெறியும்
கரிவேப்பிலையைபோல்
எடுத்து வீசி விடுகிறோம்
இலைகளின் மகிமைகளை

சுபகாரியங்களில்
முதலிடம் கொடுத்து வரவேற்று
பின் அதையே மென்றுத் துப்பி
பொது இடங்களை அசுத்தமாக்கி
கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கிறோம்
வெற்றிலைகளுக்கு

தேநீராய் உறிஞ்சிக் குடிப்பவனுக்கு
உட்சாகமூட்டிவிட்டு
தேகம் தேய உழைத்த்தவனை
இருட்டில் போட்டுவைக்கும்
தேயிலை இலைகள்
தேசத்தின் உரமாகின்றன

மொட்டைமரங்களின்
ஓட்டை நிழல்களில்
உட்கார்ந்து பேச
யாருமில்லா ஊர் வாய்
இலைகளை பற்றிப்
பேசத்தவருவதில்லை

மாவிலை தோரணம்
ஆலிலை அரசிலை புராணம்
இலையில்லா கள்ளி மர ஏளனம்
பருழுத்தோலை பார்த்து
குருத்தோலை சிரித்த
வாழ்க்கைத் தத்துவம் என்று
இலைகளால் ஏராளப்
பயனடைந்தோம் என்றாலும்
இலைகள்போல் பயனுற மறந்தோம்.

சமூக விரோத இலைகள்
சட்ட விரோத இலைகள்
என்று போதைக்கு பாதைபோட்டு
புகையிலையையும்
கஞ்சா இலையையும்
விளைவித்து விலை உயர்த்தி
சமூக நிலைகளை தாழ்த்திவிட்டோம்

இலைகள் இருப்பதால்தான்
இளைப்பாறுகிறோம்.
இறந்தாலும் பாடையாய்ச் சுமக்கும்
இலைகளைப் பார்த்தேனும்
மண்மேல் வந்தது வாழ்ந்தது
மண்ணுக்குச் சொந்தம் என்பதையாவது
மனதுக்குள் வைப்போம்.

ஆலிலைகலில் மட்டும்
பக்தி கொள்ளாமல் இனி
all இலைகளிலும் பக்தி கொள்வோம்
ஏனெனில்
பேசாத இலைகள்
பேசும் நமக்கு தெய்வம்

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Jun-15, 4:50 am)
Tanglish : ilaikal
பார்வை : 246

மேலே