அந்தக் காயத்திற்கு களிம்பில்லை

என்றோ நானழுத
ஊமைக் குரலின்
உறுத்தல்
இப்போதும் நெஞ்சுக்குள்...

என்
காட்டுமலை கிராமத்தின்
தேயிலைத் தோட்டங்களில்
பள்ளி விடுமுறை நாட்களில்
சுற்றித் திரிந்த
கன்றுகுட்டிப் பருவங்கள்...

என்னோடு சுற்றும்
அந்த மூன்று சிறுவர்களும்
என்னைப் போலவே
சிட்டுக் குருவிகள்

பந்தாட்டங்கள் தவிர்த்து
பறவைக் கூடுகளைத்
தேடிக் கண்டு ரசிக்கும்
வினோத ஆசைகள்

ஒரு நாள்..
தூரத்து மலைச்சரிவில்
ஆரஞ்சுமரக் கூட்டிலிருந்து
ஒரு புறாக் குஞ்சு
கொண்டு வந்தேன்
வீட்டிலே வளர்க்க

'சிறகு விரியாத
சின்னக் குஞ்சு'
சித்தப்பா அடித்தார்
அப்போது அழவில்லை

தன்னந் தனிக்குஞ்சை
தாய்க்கூட்டில் விட்டுவிட
தூரமலைச் சரிவுக்கு
தோழர்கள் வரமறுக்க
அப்போதும் அழவில்லை

இன்று நினைத்தாலும்
என் கவிதை நடுங்கும்
அது ஓர் இனம் புரியா
பயம் உறுத்தும் பயம்.

கடைசியில் என்ன செய்தேன்?
ஆரஞ்சு மரக்கூட்டுச்
செல்ல புறாக்குஞ்சை
ஊருக்கு அருகே ஒரு
தேயிலைச் செடியின்
கரிக்குருவி கூட்டுக்
குஞ்சுகளோடு விட்டுவந்தேன்.

அப்போது நான் அழுதேன்
அன்று நானழுத
ஊமைக் குரலின்
உறுத்தல்
இப்போதும் நெஞ்சுக்குள்..

ஒ..அந்தக்
கரிக்குருவி கூட்டுக்குள்
புறாக்குஞ்சு என்னானதோ?
என் மனக்கூட்டுக்குள்
என்றும் உறங்கும்
ஒரு பாவமாகவோ..?
ஒரு பாரமாகவோ..? (1995)


*
கவித்தாசபாபதி

*


(என் பால்ய காலத்து உண்மை நிகழ்வு . ..மனதில் ஒட்டிக்கொண்ட பாவம்)

("தரையில் இறங்கும் தேவதைகள்" தேவதைகள் நூலிலிருந்து )

எழுதியவர் : கவித்தாசபாபதி (30-Jun-15, 7:49 pm)
பார்வை : 111

மேலே