இடைத் தேர்தல் - சில்மிஷக் கதை - சந்தோஷ்

மெகா சீரியல் குற்ற வழக்கிலிருந்து விடுதலைப் பெற்ற இல்லை இல்லை விடுதலையை பிடுங்கிய மாக்கள் அமைச்சர் மீண்டும் அமைச்சர் என்றாகிட ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற வேண்டும் என்கிற கட்டாயச் சூழ்நிலை. வெற்றி பெற்று விடலாம் என்கிற அதிகாரத் திமிரும் அராஜாகப் பலமும் இருந்தது. எடுப்படி கோவிந்தன் தன் எடப்பாடி எம்.எல்.ஏ தொகுதியை தனது மாண்புமிகு போராளித் தலைவி அம்மாச்சிக்கு விட்டுக்கொடுத்தார்.

மேகி நூடுல்ஸ் வெந்து விடும் வேகத்தை போலவே தலைவி விடுதலையான வேகத்தில் இடைத்தேர்தலை அறிவித்து ஜனநாயகத்தை சமைத்தது தேர்தல் ஆணையம்.
அடுத்த ஓராண்டில் வரும் பொதுத்தேர்தலுக்கு முன்பே தங்களது கட்சிப் பணத்தை காலி செய்ய விரும்பாத எதிர்கட்சிகள்....... தேர்தல் ஆணையத்தை வசவுப்பாடி போட்டியிலிருந்து ஒதுங்கிகொண்டது.
கிழக்குசாரி ரெட்டிஸ்ட் கட்சி மட்டும் அம்மாச்சியை எதிர்த்து போட்டியிட துணிந்தது. வெற்றி பெற்றால் சரித்திரம் மாறாக நடந்தால் தரித்திரம் என்பதைப்போல இருந்தது அவர்களின் வீராப்பு துணிச்சல்.

ஆஹா.. அம்மாச்சியை எதிர்த்தால் அகில உலக புகழடா... படு ஜோரான நேரம்டா இது என்று.... யாருமே இல்லாத கடைக்கு ஜனநாயக கடமை ஆற்ற களம் இறங்கினார் சமூகப்புலி சிக்னல் டோப்புசாமி.

ஆளுங்கட்சி அம்மாச்சி கட்சியால்.... சரக்கு மொத்த வியாபாரம் படு ஜோர். தமிழகத்தின் கறிக்கோழிகள் எடப்பாடி தொகுதியில் பிரியாணியாக மாறின. காந்தித் தாத்தா சிரித்தப்படியே கைமாறினார் இலஞ்சமாக வாக்காளர்களிடம்..

அமோக வெற்றி என்று எதிர் வேட்பாளர்களே ஊர்ஜிதம் செய்த தேர்தல் நாள் வந்தது.
வழக்கத்திற்கு மாறாக இடைத்தேர்தலில் 90 சதவீதம் வோட்டுகள் பதிவாகின.

“ என்னபா இது.. நம்ம மக்கள் பிரியாணிக்கு ரொம்ப காஞ்சிப்போயி இருந்தாங்களா....” என ஒருவர் பேச..

“ அட இல்லப்பா .. இது அவா தொகுதி.. அவா ஆளுங்க இருக்காங்கப்பா அதிகமா.. அதானாலயும் இருக்கும்பா “ இன்னொரு புத்தனாக அளந்தார் டீக்கடை மாமா.

“ மஞ்சள் கட்சி ஓட்டும் சேர்ந்தும் மொத்தமா போட்டுட்டாங்களா... காசு வந்தா கட்சியாவது கொள்கையாவது.. “ இப்படி பேசியது சென்றமுறை ஓட்டுக்கு பணம் வரவில்லையென்று வேட்பாளரை வீடுத்தேடி திட்டிவிட்டு வந்த மாண்புமிகு வாக்காளர்.

” ஒரு வேள...... ரெட்டிஸ்ட் கட்சி ஜெயிடுச்சிடுமோ..” ஆருடம் ஆனந்தா.. ஏடாகூடாமாக யோசிக்க.. நாட்கள் சென்றது.

வாக்குகள் எண்ணப்படும் நாள் வந்தது.

முதல் சுற்றில் அம்மாச்சி முன்னிலை.
இரண்டாம் சுற்றில் அம்மாச்சி 2 வோட்டுகள் முன்னிலை.

தமிழக தேர்தல் ஆணையர் கதி கலங்கினார். அறிவிப்பு வெளியிட முடியவில்லை. வெளியிட்டால் .............

நேரமாகிக்கொண்டே இருக்கிறது.
ஊடகங்கள் மைக்கை பிடித்தப்படி கேள்வி கேட்கிறது.

அம்மாச்சியின் தோட்டத்தில் சர்வ அமைதி.
ரெட்டிஸ்ட்டின் தலைமையிலும் சர்வ அமைதி. ஆனால் சற்று நிம்மதி... பலத்த போட்டி கொடுத்துட்டோம்ல..என்று சந்தோஷ கூத்தாட்டம் வேறு,
சிக்னல் டோபுசாமிக்கோ குதூகலம்...

தமிழக தேர்தல் ஆணையர் பதவி விலகி தன் சொந்த மாநிலத்திற்கு ஓடி விட்டார் என்கிற சற்று முன் வந்த செய்தியாக பழைய தலைமுறை செய்தி சேனலில் வாசிக்கப்பட்டது.

நீண்ட இழுப்பறிக்கு பின்னர் டெல்லியிலிருந்து அறிவிப்பு வெளியானது.............

எடப்பாடியில் நடந்த இடைத்தேர்தலில் மொத்தம் பதிவாகிய ஒரு இலட்சத்து இருதைந்தாயிரம் ஒட்டுகளில்
அம்மாச்சி டயலலிதா 300 வாக்குகளும்
ரெட்டிஸ்ட் குபேந்திரன் 12 வாக்குகளும்
சிக்னல் டோபுசாமி 2 வாக்குகளும் பெற்று உள்ளனர்.
யாருக்கும் வாக்கு அளிக்க விரும்பாத நோட்டாவிற்கு 1,24,686 வாக்குகள் பெற்றுள்ளன.

ஆகையால்.. இந்த இடைத் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் குறைந்தப்பட்ச வாக்குகளை பெற முடியா காரணத்தினால் டெபாசிட் இழந்து விட்டார்கள். இதுபோன்ற ஒரு எதிர்பாரா தேர்தல் முடிவால் எடப்பாடி தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்த சட்டத்தில் இடம் உண்டா என்பதை மத்திய அரசும.. தேர்தல் ஆணையமும் முடிவு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது . அதுவரை இத்தொகுதி தமிழக ஆளுநரின் நேரடி பார்வைக்கு உட்பட்ட தொகுதியாக இருக்கும்.

முதல்வர் டி.பி.எஸ் க்கு பேதியாகி விட்டது. மருத்துமனையில் சேர்க்கப்பட்டார் என்கிற செய்தி தின போஸ்ட் சேனலில் வாசிக்கப்பட...

அம்மாச்சி தோட்டத்தில் விலையுர்ந்த பொருட்கள் உடைக்கப்பட்டன என்கிற செய்தி வலைஞர் நியூஸ் சேனலில் வாசிக்கப்பட்டது.

பெரியண்ணா புத்திலாயத்தில்.. ம.க லெனின் பேட்டி

” இந்த இடைத்தேர்தல் முடிவு பற்றி உங்க கருத்து ? “ லெக்கின்ஸ் தேவதை நிருபர் கேள்வி கேட்கிறார்.

இப்படிப்பட்ட முடிவு அம்மாச்சியை அதிர வைத்தாலும் எங்களையும் ஆட்டுவிக்கிறது என்று சொல்லாமால்... சிரித்தப்படி சொல்கிறார்

“ ஜனநாயகம் வெற்றி பெற்றது “


ஆம் ஜனநாயகம் வெற்றி பெற்றது... ஆம் ஆம்.. ஆம்....



அய்யோ... மம்மி...........!

” டேய் எழுந்திருடா.. ஆபிஸ்க்கு நேரமாச்சு.. சும்மா கண்ட கண்ட கனவு கண்டு புலம்பிட்டு இருக்க...” என்னை பெத்த அம்மாதான்.. திட்டிட்டு போறாங்க.

சரிங்க தோழர்ஸ்...

நான் ஆபிஸூக்கு போறேன்... டாடா..........

இருங்க இருங்க ..
ஒரு டவுட்டு.. இந்த கனவுக்கு எல்லாம் அவமதிப்பு வழக்கு பாயுமா... ப்ரெண்ட்ஸ் ???

ஆமாவா ?

அய்யோ எஸ்கேப்பு சந்தோசு..................!!




-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (1-Jul-15, 1:01 am)
பார்வை : 315

மேலே