நம்பிக்கை எனும் நெம்புகோல்
வாழ்வை வளமாக்கும் மகா மந்திரமா?
வாழும் கலையில் அது ஒரு தந்திரமா?
வாழ உதவிட வல்ல நல்எந்திரமா?
வாழ்வாங்கு வாழ நம்பிக்கை வாங்கி வந்த வரந்தானா?
கல்லில் தெய்வம் காணும் பக்தியா?
புல்லை மருந்தென ஆக்கும் வித்தையா?
தோல்வியைப் புறங்காணச் செய்யும் உத்தியா?
நல்மனிதர் மனதிற்குள் எழுகின்ற சக்திதானா?
கனிந்த நட்பினை நெருக்கும் விசையா?
இனிய உறவினை இறுக்கும் பசையா?
தனித்த வெற்றி இருக்கும் திசையா?
இனிதாய் வாழ்வில் இசைக்கும் இசைதானா?
அடுத்தநொடி இங்கு நிச்சயமில்லை!
விடுக்கும் மூச்சும் சாசுவதம் இல்லை!
தெம்புடன் வாழ்வை நகர்த்த உதவும்
நெம்புகோல் நம்பிக்கை நம்பிக்கை மட்டும் தான்!

