திருவலிவலம் பதிகம் 10

முதல் திருமுறையில் 123 வது தலமாக ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருவலிவலம் பதிகத்தில் 10 ஆம் பாடல்.
இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.10
பொழிப்புரை:
மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மிகுதியான மருதந்துவர் இலைகளால் பிழியப்பட்ட மிக்க துவர்நிறம் உடைய ஆடைகளை அணிந்த புத்தர்களும், நின்றுண்ணும் இயல்பினர்களாகிய சமணர்களும் நினைப்பதை அழித்து, பொருள் தன்மையால் வலியவான பெருமை மிக்க வேதங்கள் தன்னைத் தொடருமாறு செய்தருளும் உருவத்தை உடையவனாய் உள்ளான்.
குறிப்புரை:
சமணர் புத்தர்களுடைய நினைப்புத் தொலைய, வேதம் தேடும் வடிவினன் வலிவலநாதன் என்கின்றது.
இலை மலிதர மிகு துவர் உடையவர்கள் - வாயில் வெற்றிலை மிக, காவியுடுத்த புத்தர்கள்.
நிலைமையில் உணலுடையவர்கள் - நின்றபடியே விழுங்கும் தேரர்கள்.
குறிப்பு:
திருவலிவலம்:
இறைவர் பெயர் இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்,
இறைவியின் பெயர் வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி,
தல மரம் - புன்னை, தீர்த்தம் - சங்கர தீர்த்தம்.
தல வரலாறு: வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.
சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.
சிறப்புகள்: வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.
இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.
தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.
கோவிலுக்குச் செல்லும் வழி:
தமிழ் நாட்டில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம்.
திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவிலுள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம்;